ADDED : மே 16, 2025 11:55 PM

அ.தி.மு.க., நேற்று வெளியிட்ட அறிக்கை:
'டாஸ்மாக்' நிர்வாக இயக்குநர் வீட்டின் அருகே, கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விபரங்கள் குறித்த 'வாட்ஸாப்' உரையாடல் பதிவுகள் கிடைத்ததாகவும், இவை, துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது என்றும் செய்திகள் வருகின்றன.
டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட இந்த ரத்தீஷ் யார்? டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால், தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று, அதன் நிர்வாக இயக்குநரிடம் ரத்தீஷ் கூறுவது ஏன்? யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?
உதயநிதியுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எடுத்த புகைப்படத்தை, அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்? டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை, அதன் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான், தி.மு.க.,வின் புதிய அதிகார மையமா?
'லாஜிக்'காக பார்த்தால், ரத்தீஷ் என்ற தனி நபரின் மெசேஜிக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு துளியும் இல்லை.
இவர், துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தனரா? ரத்தீஷை நெருங்கும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையம். இந்த குறி உதயநிதிக்கா?
'யார் இந்த தியாகி' எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள, 'அந்த சார் யார்' எனவும் கேள்விகள் எழுகின்றன. கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்கும் என நம்புவோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.