காமராஜர் ஆட்சியும் தி.மு.க., ஆட்சியும் ஒன்றா? செல்வப்பெருந்தகைக்கு மாணிக்தாகூர் கண்டனம்
காமராஜர் ஆட்சியும் தி.மு.க., ஆட்சியும் ஒன்றா? செல்வப்பெருந்தகைக்கு மாணிக்தாகூர் கண்டனம்
ADDED : பிப் 18, 2025 07:06 AM

'திராவிட மாடல் ஆட்சியை, காமராஜர் ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம்' என, தமிழக காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, அக்கட்சியை சேர்ந்த எம்.பி., மாணிக்தாகூர், 'காமராஜர் ஆட்சியை பார்க்காத, படித்து தெரிந்து கொள்ளாதவர்கள், அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு' என கண்டித்துள்ளார்.
சமீபத்தில், செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், 'தி.மு.க.,வின் திராவிட மாடல் ஆட்சியை, காமராஜர் ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம்' என, கூறியுள்ளார். அதற்கு அவரது கட்சியினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். 'தி.மு.க., ஆட்சியை போய், காமராஜரின் பொற்கால ஆட்சியுடன் ஒப்பிடுவதா' என, சமூக வலைதளங்களில், மாநில தலைவர் என்றும் பாராமல், செல்வப்பெருந்தகையை அவரது சொந்த கட்சியினரே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், செல்வப்பெருந்தகைக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் விருதுநகர் எம்.பி.,யும், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான மாணிக்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காமராஜர் ஆட்சியை பார்க்காத, படித்து தெரிந்து கொள்ளாதவர்கள், அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு. காங்., முன்னாள் தலைவர் ராஜிவ் கனவு காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ் உணர்வாளர்களின் கனவு. ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாணிக்தாகூரின் அறிக்கைக்கு சமூக வலைதளங்களில் காங்கிரசார் ஆதரவு தெரிவித்துள்ளனர். 'காமராஜரின் பொன்னான ஆட்சி என்ற கூற்றை மட்டுமே ஏற்றுக் கொள்வோம். காமராஜருக்கு நிகர் அவர் மட்டுமே' என, பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கு பதிலடியாக, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களும், சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
'செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த லோக்சபா தேர்தலில், 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தொண்டர்கள் மத்தியில், தனக்கென தனி செல்வாக்கை பெற்றவர் அவர்.
கூட்டணி கட்சியுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். அதன் அடிப்படையிலான கருத்தைத்தன் அவர் சொல்லி இருக்கிறார்' என, அவற்றில் கூறியுள்ளனர்.
- நமது நிருபர் -

