ADDED : பிப் 18, 2024 04:56 AM

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரசை உருவாக்கி, அதன் தலைவராக இருக்கிறார். இவருடைய மருமகன் அபிஷேக் பானர்ஜி. 36 வயது இளைஞரான இவர், திரிணமுல் கட்சியின் பொதுச்செயலர்; அதனுடன், 'டயமண்ட் ஹார்பார்' தொகுதியின் எம்.பி.,யாகவும் இருக்கிறார்.
இவர், மம்தாவிற்கு அடுத்த படியாக கட்சியில் செல்வாக்காக இருப்பவர். ஆனால், சமீப காலமாக மம்தாவிற்கும், பானர்ஜிக்கும் இடையே உறவு சரியில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில், மத்திய அரசுக்கு எதிராக மம்தா போராட்டம் நடத்தினார்.
போதிய அளவு நிதியை மோடி அரசு ஒதுக்கவில்லை என்பதற்கான போராட்டம். மம்தாவோடு எப்போதும் இருக்கும் அபிஷேக் பானர்ஜி இந்த போராட்டத்தில் தென்படவில்லை.
ராமர் கோவில் திறப்பு விழா தினத்தன்று, கோல்கட்டாவில் யாத்திரை ஒன்றை மேற்கொண்டார் மம்தா.அதில் பங்கேற்ற பானர்ஜி, அதன்பின் எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் தென்படவில்லை.
'என் தொகுதியில் பிசியாக இருக்கிறேன்' என, கூறுகிறாராம் பானர்ஜி. 'மம்தாவிற்கு பின் இவர் தான் முதல்வர்' என்றெல்லாம் பேச்சு ஒரு சமயத்தில் இருந்தது. ஆனால், இப்போது நிலை சரியில்லை என்கின்றனர். தனக்கும், மம்தாவிற்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதை பானர்ஜியே கூறியுள்ளார்.
'பானர்ஜியால் தனியாக மம்தாவிற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது; அதனால், கட்சிக்குள் எந்த பிரச்னையும் இல்லை' என்கின்றனர் சீனியர் தலைவர்கள்.