தங்கம் வாங்க, இது நல்ல நேரமா? நகை விற்பனையாளர்கள் சொல்வது என்ன
தங்கம் வாங்க, இது நல்ல நேரமா? நகை விற்பனையாளர்கள் சொல்வது என்ன
ADDED : நவ 23, 2026 05:56 AM

- நமது சிறப்பு நிருபர் -
அமெரிக்காவில் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதால், தங்கத்தை விற்று டாலர்களிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்யத் துவங்கியிருப்பதால், இந்தியாவில் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. தங்கம் வாங்க நினைப்போருக்கு இதுவே சரியான தருணம் என்கின்றனர், தங்க நகை விற்பனையாளர்கள்.
சர்வதேச பொருளாதார மாற்றங்கள், தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்படுத்துகிறது. இவ்வாண்டு துவக்கத்தில் ஜனவரியில் ஒரு பவுன் தங்கம் ஒரு லட்சத்து, 34 ஆயிரமாக உயர்ந்தது. அதன்பின், சர்வதேச சந்தைக்கேற்ப விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது ; பெரிய அளவில் குறையவில்லை.
அமெரிக்காவில் தேர்தலுக்குபின், நவ., 9ல் இருந்து விலை சரிய ஆரம்பித்தது. தற்போது ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்கு சரிந்துவிட்டது. இன்னும் 2,000 - 3,000 ரூபாய் வரை குறையலாம் என்கின்றனர், நகை விற்பனையாளர்கள். இவ்வீழ்ச்சிக்கு பல காரணங்களை கூறுகின்றனர்.
வழக்கமாக சர்வதேச பொருளாதாரம், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச்சந்தை செயல்பாடு அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படும். அமெரிக்காவில் அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்கி குவிப்பது, டாலர்களில் டெபாசிட் செய்வது போன்ற காரணங்களால் தங்கத்தை விற்க ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர்.
பத்திரங்களில் முதலீடு
நகை விற்பனையாளர்கள் கூறுகையில், 'அமெரிக்காவின் பொருளாதார சூழல் காரணமாக, அங்கு வட்டி விகிதத்தை உயர்த்தப் போகின்றனர். அந்நாட்டில் உள்ள பெடரல் வங்கி கூட்டம் டிச., 7 - 8ல் நடைபெற இருக்கிறது. 0.5 சதவீதம் வட்டி உயர்த்தப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது; வட்டி உயர்வை அந்நாட்டு மக்களும், முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கின்றனர். தங்கமாக வைத்திருந்தால் தங்கமாக மட்டுமே இருக்கும். டாலராக டெபாசிட் செய்திருந்தாலோ அல்லது முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்தாலோ, கூடுதல் வட்டி கிடைக்கும். அதனால், கையிருப்பு தங்கத்தை விற்கின்றனர்; அதனால், விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.
அந்நாட்டில் தேர்தல் நேரத்தில் பங்குச்சந்தை சரிந்தது; இந்திய பங்குச்சந்தை உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தைக்குள் வெளிநாடுகளில் இருந்து முதலீடு அதிகமாக வந்திருக்கிறது. இந்திய நாணய மதிப்பு வலுவடைந்திருக்கிறது. ஒரு டாலரின் இந்திய மதிப்பு இதற்கு முன் 96 ரூபாயாக இருந்தது; ரூ.92.68 என ஆகியுள்ளது. இதுவும் தங்கம் விலை குறைய காரணம்' என்கின்றனர்.
டிச., கூட்டமே முக்கியம்
தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் பெடரேசன் தலைவர் சபரிநாத் கூறியதாவது: அமெரிக்காவில் டிச., முதல் வாரத்தில் நடைபெற உள்ள கூட்டம் வரை தங்கம் விலை இறங்கு முகமாக இருக்கும். அந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, விலை உயருமா அல்லது சரியுமா என்பதும், தங்கம் எதை நோக்கிச் செல்லும் என்பது தெரியவரும். வட்டி விகிதம் எவ்வாறு நிர்ணயிக்கப் போகிறார்களோ, அதற்கேற்ப மாறுபடும்.
இன்னும் 3 மாதத்தில் கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி விகிதம் அதிகரிக்கும் என அறிவித்தால், இன்னும் வீழ்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும், 5 - 7 சதவீதமே குறைய வாய்ப்புண்டு. இன்னும் குறையட்டும்; அப்போது வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருக்க வேண்டியதில்லை. தங்கம் வாங்க நினைப்பவர்கள் டிச., 8க்குள் வாங்குவது நல்லது. இப்போதே நிறையப் பேர் தங்கம் வாங்க ஆரம்பித்து விட்டனர். ரொம்ப நாள் கழித்து வர்த்தகம் நன்றாக நடக்கிறது. 2 வாரத்தில் விற்பனை அதிகரித்திருக்கிறது.
அதேநேரம், முதலீட்டாளர்கள் பயப்பட தேவையில்லை. எதிர்காலத்தில் தங்கம் விலை உயரவே செய்யும். இது, தற்காலிக சரிவே. எந்த வேகத்தில் இறங்கியதோ, அதே வேகத்தில் ஏறும். இவ்வாறு, அவர் கூறினார்.
சைலன்டாக கொள்முதல்
சபரிநாத் மேலும் கூறுகையில், ''நிறைய நாடுகள் இப்போதே தங்கத்தை கொள்முதல் செய்து வருகின்றன. முக்கியமாக, போலந்து, சீனா, கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்கத்தை வாங்குகின்றன. சீனா மட்டும் 160 டன் தங்கம் வாங்கியிருக்கிறது. பல்வேறு நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், அதன் விலையை கீழிறங்க விட மாட்டார்கள். தங்கத்தின் இருப்பைக் கொண்டே கரன்சி அடிப்பார்கள். சில நாடுகள் சைலண்ட்டாக தங்கம் வாங்க ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள்,'' என்றார்.
'சந்தையில் பயத்தை உருவாக்குகிறார்கள்'
மத்திய அரசின் 'எம்.எம்.டி.சி., -பேம்ப்' அமைப்பின் டீலர் கயிலைராஜன் கூறியதாவது: ஈரான் யுத்தம் இன்னும் முடியவில்லை. உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு இருக்கிறது; விலை உயர்ந்திருக்கிறது. கடனுக்கு தருவதில்லை. இதற்கு முன் புக்கிங் செய்யப்படும்; தருவார்கள்; பணம் தரப்படும். இப்போது கிடைக்கும் இடத்தில் எண்ணெய் வாங்க, முன்பணம் செலுத்த வேண்டியிருக்கிறது; பேரம் பேச முடிவதில்லை. பணம் தேவைப்படுவதால், பல நாட்டு அரசுகளும் தங்கத்தை விற்கின்றன. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து மற்ற நாடுகளுக்கு தரும் வேலையை இந்தியா செய்வதால், எண்ணெய் வளத்தில் பாதுகாப்பாக இருக்கிறது.
ஜன., மாதம் விலையை உயர்ந்தபோது, விற்பனை செய்த முதலீட்டாளர்கள் இப்போது கொள்முதல் செய்கின்றனர். சைலண்டாக சீனாவும் பெரிய அளவில் வாங்கி வருகிறது. சந்தையில் பயத்தை உருவாக்குகின்றனர். அவசியம் இல்லாவிட்டால் யாரும் விற்க வேண்டியதில்லை. பணம் இருந்தால் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். 2027 ஜன.,க்கு பின் படிப்படியாக விலை உயர வாய்ப்புள்ளது. தங்கம் விலை உச்சத்துக்கு சென்றதில் இருந்து கணக்கிட்டால், இப்போது 30 - 35 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இவ்வாறு, கூறினார்.
