இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் சிறப்பு பேட்டி
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் சிறப்பு பேட்டி
ADDED : ஜன 09, 2025 07:26 AM

''இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின் எல்லா முயற்சிகளுக்கும், விண்வெளித் துறை சார்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்,'' என, 'இஸ்ரோ' தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் தெரிவித்தார்.
நம் நிருபரிடம் அவர் கூறியதாவது:
இஸ்ரோவில், நான் பணியில் சேர்ந்து 41 ஆண்டுகளாகின்றன. திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள இஸ்ரோவின் எல்.பி.எஸ்.சி., மையத்தில் இயக்குனராக ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.
கிரையோஜெனிக்
ஐ.ஐ.டி., கரக்பூரில், கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் எம்.டெக்., -- பிஎச்.டி., முடித்துள்ளேன். இஸ்ரோவில் மிக சிறப்பாக செயலாற்றுவதற்கான வாய்ப்புகளை இதுவரை பெற்றிருக்கிறேன்.
இந்தியாவிற்கு, பிற நாடுகள் தர மறுத்த கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் தொழில்நுட்பத்தை நாமே வடிவமைத்தோம். அதன் திட்ட இயக்குனராக இருந்து 'மார்க் - 3 கிரையோஜெனிக்' இன்ஜினை மிக வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதில் மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தினோம்.
'சந்திரயான் --- 2' கடைசி நேரத்தில் தோல்வியை சந்தித்த போது, அதற்கான காரணங்கள் என்ன என்று கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்தேன்.
அக்குழு, 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்தது. அவற்றையெல்லாம் ஏற்று நிவர்த்தி செய்து 'சந்திரயான் - 3' வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
பி.எஸ்.எல்.வி., - -ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 என அனைத்து ராக்கெட்களுக்கான, 'ஸ்பேஸ் டிரான்ஸ்போர்ட்டிங் சிஸ்டம்' திட்ட நிர்வாக கவுன்சில் தலைவராகவும் தற்போது பணிபுரிந்து வருகிறேன்.
மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தில் தேசிய அளவு சான்றிதழ் வாரிய தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன்.
'சந்திரயான் - 4' வாயிலாக, நிலவில் இருந்து மாதிரிகள் எடுத்து வரும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம். சந்திரயான் 3ல் 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை அனுப்பினோம்.
சந்திரயான் - 4 திட்டத்தில் 9,800 கிலோ எடைஉள்ள செயற்கைக்கோளை அனுப்ப உள்ளோம். இன்னும் ஏராளமான விண்வெளி திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. எல்லா திட்டங்களும் நாட்டு மக்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரம், ஆரோக்கியத்தை உயர்த்தும் திட்டங்கள் தான்.
பிரதமருக்கு நன்றி
அவற்றை செயல்படுத்தும் இஸ்ரோவின் தலைமை பொறுப்பிற்கு வந்திருப்பது பெருமை. அதற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மிக பொறுப்பான பதவியை தந்துள்ளார்.
விண்வெளித் துறையில் மிகவும் திறமையானவர்கள் பணியில் உள்ளனர். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின் எல்லா முயற்சிகளுக்கும் விண்வெளித் துறை சார்பில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -