முதல்வரின் பார்வைக்கு... இருதய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லை; ஏழை நோயாளிகள் பலியாகும் பரிதாபம்
முதல்வரின் பார்வைக்கு... இருதய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லை; ஏழை நோயாளிகள் பலியாகும் பரிதாபம்
UPDATED : அக் 09, 2025 08:24 AM
ADDED : அக் 09, 2025 07:04 AM

கோவை : கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் அறுவை சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால், அவசர சிகிச்சை பெறமுடியாமல், ஏழைகள் உயிரிழக்கின்றனர்; இதற்கு 'முதல்வர் முற்றுப்புள்ளி வைப்பாரா' என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் தினமும், 7,000 முதல், 9,000 பேர் உள், புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு சிகிச்சைகளுக்கு, நோயாளிகள் இங்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இங்குள்ள இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவுக்கு, அனுமதிக்கப்பட்ட நான்கு டாக்டர் பணியிடங்களில், தற்போது ஒரே ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இதனால், இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை.
முக்கிய அறுவை சிகிச்சையின்போது, நான்கு டாக்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். டாக்டர்கள் இல்லாததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளை சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.
நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், உயிரிழக்கின்றனர். சற்று வசதி உள்ளவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து உயிரை காப்பாற்றிக்கொள்கின்றனர்.
ஆனால், ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையை விட்டால் வேறு வழியில்லை. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து, சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அரசு மருத்துவமனையில் ஏழைகளுக்கு அனைத்து தரமான சிகிச்சையும் அளிப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், முதல்வரும் மாறி, மாறி கூறி வருகின்றனர்.
இங்கோ, ஏழை மக்கள் உயிரிழப்பதை கண்கூடாக காண முடிகிறது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சருக்கு இது நன்கு தெரிந்தும், கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்பது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கேட்கும் கேள்வி. முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா?