ஊழல்வாதிகளை பாதுகாப்பது தி.மு.க.,வின் இயல்பு: பா.ஜ.,
ஊழல்வாதிகளை பாதுகாப்பது தி.மு.க.,வின் இயல்பு: பா.ஜ.,
ADDED : ஆக 22, 2025 02:29 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரு தெளிவான நோக்கத்துடன் சட்ட மசோதாவை அறிமுகம் செய்து உள்ளது.
இது, குற்றவியல் மற்றும் நேர்மையற்ற பின்னணியை உடைய நபர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளில் இடமில்லை என்பதை உறுதி செய்கிறது. '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் முதல், தமிழகத்தில் டாஸ்மாக் வரை ஊழல் மரபுகளை வைத்துக் கொண்டு, மத்திய அரசின் மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை. ஊழல்வாதிகளை பாதுகாப்பது, தி.மு.க., கூட்டணியின் இயல்பாக மாறிவிட்டது.
இந்த மசோதா மீதான முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மாறாக, குற்றங்களில் இருந்து விடுபட்ட, தேசத்திற்கு சேவை செய்வதற்கே அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர்களுக்கான, நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றுகிறது. சர்வாதிகாரம் என்ற குற்றச்சாட்டும் வெற்றுத்தனமானது.
பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு பதில், வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை ஆதரிக்க வேண்டும்.
பதவியில் இருக்கும் அமைச்சர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தன் மீதான வழக்கின் முடிவை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முடியும் என்பது புதிய சட்டத்தால் இல்லாமல் போகும்.
தன் அமைச்சரவையில் உள்ள ஊழல் அமைச்சர்கள், இனி தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீதியை வளைக்க முடியாது என்பதால் தான், புதிய சட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறாரோ?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.