மக்கள் விரும்பும் மாற்று அரசியல் உருவாகாமல் போனது துரதிருஷ்டம்: உங்களில் ஒருவன்
மக்கள் விரும்பும் மாற்று அரசியல் உருவாகாமல் போனது துரதிருஷ்டம்: உங்களில் ஒருவன்
UPDATED : ஜன 13, 2024 04:34 AM
ADDED : ஜன 13, 2024 03:02 AM

கடந்த 1861 முதல், சுதந்திரத்திற்கு பின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாகும் வரையில், தனி மாவட்டமாக இருந்த ராயக்கோட்டை, வேப்பனபஹள்ளி சட்டசபை தொகுதியிலும், 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேட்டராய சுவாமி கோவில் அமைந்திருக்கும் தளி சட்டசபை தொகுதியிலும், பொது மக்களின் உற்சாக ஆரவாரத்துடன் பாதயாத்திரை பயணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
பன்னீர் ரோஜா
தளி தொகுதியில் மட்டும் 20,000 ஹெக்டேர் கேழ்வரகு சாகுபடி, 15,000 ஹெக்டேரில் கேரட், பீட்ரூட், காலிப்ளவர் போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
தளி, ஓசூர், கெலமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமை குடிலில் ரோஜா சாகுபடி நடக்கிறது. இங்குள்ள பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு பெற, தமிழக பா.ஜ.,வுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது; நிறைவேற்றப்படும்.
பிரதமர் மோடியின் நல்லாட்சியில், தொழில்முனைவோர்களில் பெண்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது
கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் உதவி 26,659 கோடி ரூபாய்
தமிழகத்தில் பதியப்பட்ட மொத்த சிறு, குறு நிறுவனங்களில், 5,84,599 நிறுவனங்கள், பெண்களின் பெயரில் உள்ளன
இந்தியாவில் இன்று 1.2 கோடி மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அதில், 88 சதவீத சுயஉதவி குழுக்கள் முழுவதுமாக பெண்களால் நடத்தப்படுகின்றன
கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும், ஏழு கோடி பெண்கள் சுய உதவி குழுக்களில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகை, 7.22 லட்சம் கோடி ரூபாய்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் உருவான மகளிர் தொழில் முனைவோரின் எண்ணிக்கை 10,037.
பணமும் மனசும் இல்லை
அஞ்செட்டி அக்கா-தங்கை ஏரியை மையப்படுத்தி, தொட்டல்லா அணை கட்ட வேண்டும் என்பது, இந்தப் பகுதி மக்களின், 50 ஆண்டு கால கோரிக்கை.
கடந்த, 1999,- 2000ம் ஆண்டுகளில், தமிழக பொதுப்பணித் துறை தொட்டல்லா அணை கட்ட, 25 கோடி செலவாகும் என, திட்ட அறிக்கை தயாரித்தது.
இதை செயல்படுத்தினால், அஞ்செட்டி சுற்றுப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணை கட்ட பணம் இல்லை என்று, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு திட்டத்தை நிறைவேற்றவில்லை.
பேனா சிலை அமைக்க, பாராட்டு விழா நடத்த, திரைப்படங்கள் எடுக்க, பெயர் வைப்பதற்காக வீண் கட்டடங்கள் கட்ட, பணம் வைத்திருக்கும் தமிழக அரசிடம், விவசாயிகள் நலனுக்காக அணைகள் கட்டப் பணம் இல்லை; ஆட்சியில் இருப்போருக்கு மனதும் இல்லை.
தங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படுவது தெரியாமல், பொது மக்களும் இளைஞர்களும் தகுதியே இல்லாதவர்களை தலைவர்களாக ஏற்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது.
மக்கள் விரும்பும் மாற்று அரசியல், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக உருவாகாமல் போனது துரதிருஷ்டவசமானது. தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை, இந்த நடைபயணத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் ஆத்மார்த்தமாக உணர முடிந்தது.
இனிய தருணங்கள்
மானாமதுரையில் மண் பானை தொழிலாளர்களுடன் அமர்ந்து, மண் பானை செய்தது; சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தாத்தா என்னை ஆரத்தழுவி வரவேற்று, மகிழ்ச்சியில், என் தோளில் தொங்கியது என மறக்க முடியாத இனிமையான தருணங்களை, இந்தப் பயணம் கொடுத்துள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி சகோதரர், எனக்காக மலர் கிரீடம் செய்து பரிசளித்ததும், விவசாயிகள் வழங்கிய ஏர் கலப்பை, திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில், எனக்காக புதிய செருப்பு தைத்துப் பரிசளித்த அண்ணன், அக்கா இருவரின் அன்பு என, அனைத்துப் பகுதியிலும் மக்களின் மாசற்ற அன்பைப் பெற முடிந்தது என் பாக்கியம்.
கடந்த 1920ல் வெள்ளையர்களை எதிர்த்து, வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரம் விளைந்த பெருங்காமநல்லுார் மக்களை சந்தித்தது உணர்ச்சிமயமானது.
திருச்சியில் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியதும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியதும், இளமை காலத்தை மீட்டெடுத்தது.
கடந்த 150 தொகுதிகளில் எண்ணற்ற நினைவுகளை, பாதயாத்திரைப் பயணம் கொடுத்துள்ளது. இது மட்டுமல்ல; என்னுடைய அரசியல் பயணம் முழுதுமே இந்த மண்ணுக்கானது; என் மக்களுக்கானது என்ற உறுதி, மக்களின் பேரன்பால் மேலும் வலுவாக்கப்படிருக்கிறது.
பயணம் தொடரும்...