வருஷம் நாலாச்சு; சொன்னது என்னாச்சு?: தி.மு.க., மீது தொழில்துறையினர் அதிருப்தி
வருஷம் நாலாச்சு; சொன்னது என்னாச்சு?: தி.மு.க., மீது தொழில்துறையினர் அதிருப்தி
UPDATED : மார் 31, 2025 06:18 AM
ADDED : மார் 31, 2025 05:17 AM

கோவை: தி.மு.க., ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் ஆகியும், தங்களுக்கு அளித்த அத்தியாவசிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என, கோவை தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர். 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி, கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, பெயர், அமைப்பு விபரங்களை வெளியிட விரும்பாத தொழில்துறையினர் கூறியதாவது:
2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க., தரப்பில் குழு அமைத்து தொழில்துறையினரைச் சந்தித்து, அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தது. அந்த கோரிக்கைகளை, தேர்தல் அறிக்கையாகவும் வெளியிட்டது. அதன்பிறகு லோக்சபா தேர்தல் வந்தது. அதற்கும் எங்களைச் சந்தித்தனர்;. வழக்கம்போல ஆலோசித்து விட்டு வாக்குறுதி அளித்தனர்.
குழு அமைத்தது வீண்
தி.மு.க., ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்படவில்லை.
உதாரணமாக, 197வது வாக்குறுதியாக, நலிவடைந்து கொண்டிருக்கும் குறு, சிறு தொழில்நிறுவனங்களின் பிரச்னைக்குத் தீர்வு காண, அரசுத் துறை, நிதி நிறுவனங்கள், தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின்படி தொழில் நிறுவனங்களை நலிவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் தொழில்துறை செயலாளர் சுந்தரதேவன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் என்னவாயின என்றே தெரியவில்லை.
ஆண்டு தோறும் மின்கட்டண உயர்வு, ஆலை இயங்காவிட்டாலும் நிலைக்கட்டணம் செலுத்த வேண்டிய சுமை என, சலுகைகள் தராவிட்டாலும் பரவாயில்லை, புதிய சுமைகளை விதிக்காதீர்கள் என கெஞ்சும் அளவுக்கு, தொழில்துறையினர் மோசமாக நடத்தப்படுகிறோம்.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு, தி.மு.க., இப்போதே தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. மீண்டும், என்னென்ன வாக்குறுதிகள் வேண்டும் என ஆலோசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஆட்சி முடிய இன்னும் ஓராண்டுக்குக் குறைவான காலமே உள்ள நிலையில், ஓரளவேனும் தொழில்துறைக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற, தி.மு.க., அரசு முன் வர வேண்டும்.
இவ்வாறு, தொழில்துறையினர் புலம்பித்தீர்த்தனர்.