ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு! பின்னணியில் கட்சி வசூலும் அரசியலும்!
ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு! பின்னணியில் கட்சி வசூலும் அரசியலும்!
ADDED : ஜன 25, 2024 06:36 AM

கோவை மாவட்டத்தில், இரண்டே மாதங்களில் இரண்டாவது முறையாக ஜல்லி, எம்.சாண்ட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.வீடு கட்டுவோரும், கட்டுமானத்துறையினரும் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிரசர்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்தே கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியவை அனுப்பப்படுகின்றன. இவற்றின் விலையை, கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரிகள் உரிமையாளர் சங்கமே நிர்ணயிக்கிறது.
இந்த சங்கத்தின் தலைவர் சந்திர பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கட்டுமான தொழிலை நம்பி செயல்படும் கிரஷர் மற்றும் குவாரிகள், தற்போது கடும் நெருக்கடியில் இருக்கின்றன. தமிழக அரசின் கனிமவளத்துறை, 'ராயல் டி' கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளது. மின் கட்டணமும் இரு மடங்காகியுள்ளது. கிரசர் மற்றும் குவாரிகளுக்கு கடும் நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது.
ஆட்கள் பற்றாக்குறை அதிகமாகியுள்ளதால், கூலி உயர்வும் இரட்டிப்பாகியுள்ளது. மெஷினரிக்கான உதிரிபாகங்கள் விலை, லாரிகளுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாக உள்ளதால், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் 3000 ரூபாய் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது.
எம்.சாண்ட் 4000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம், பி சாண்ட் யூனிட் 5000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, அனைத்து கனிம பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். வரும் பிப்.,1லிருந்து, இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவ.,27ல் தான், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட இதே காரணங்களைக் கூறி, எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது.
இரண்டே மாதங்களில் இரண்டாவது முறையாக, இப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது, கட்டுமானத் துறையினரையும், வீடு கட்டும் மக்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
குவாரி உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'ஆளும்கட்சி சார்பில், குவாரிகளில் அநியாயத்துக்கு வசூல் நடத்தப்படுகிறது. சமீபத்தில் சேலம் மாநாட்டுக்காக, ஒரு குவாரி மற்றும் கிரசருக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் வாங்கப்பட்டது.
இப்போது, லோக்சபா தேர்தலுக்கு, தலா 25 லட்ச ரூபாய் வேறு, பிப்.,28க்குள் கொடுக்க வேண்டும். இப்படி ஆளும்கட்சி நடத்தும் அதீத வசூல் வேட்டைதான், இரண்டே மாதங்களில் இரண்டாவது முறையாக விலை உயரக் காரணம்' என்றனர்.
ஆளும்கட்சி வசூலாலும், எதிர்க்கட்சி அரசியலாலும் பாதிக்கப்படுவது, கட்டுமானத்துறையினரும், அப்பாவிப் பொதுமக்களும்தான்!
-நமது சிறப்பு நிருபர்-