ஜாங்கிட் கதாபாத்திரம் இருட்டடிப்பு; 'பைசன்' படத்துக்கு எதிராக கொந்தளிப்பு
ஜாங்கிட் கதாபாத்திரம் இருட்டடிப்பு; 'பைசன்' படத்துக்கு எதிராக கொந்தளிப்பு
ADDED : அக் 23, 2025 06:06 AM

'பைசன்' திரைப்படத்தில், தென் மாவட்டங்களில் ரவுடிகளை அடக்கி, அமைதியை கொண்டு வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாங்கிட் கதாபாத்திரம் தவிர்க்கப்பட்டு உள்ளதால், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மீது, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
தீபாவளி பண்டிகை ஒட்டி வெளியான, மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்த, 'பைசன்' படம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. துாத்துக்குடியை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி, இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு காலகட்டத்தில், துாத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கதை. ஜாதி ரீதியாக இரண்டு தலைவர்களுக்குள் ஏற்பட்ட மோதல்களை, திரைப்படத்தில் காட்டியதோடு, அவர்கள் இருவரையும் அரசியல்வாதிகளாக மாற்றி, கதை களத்தை கையாண்டுள்ளனர்.
கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் படமாக இருந்தாலும், ஜாதிய தலைவர்களின் படங்களை எல்லாம் காட்டுவதும், ஒரு தரப்பை உயர்வாக பேசுவதும், மற்றவர்களை எதிர்ப்பு கொடிபிடிக்க வைத்துள்ளது. சில காட்சிகளுக்கு மட்டும் தடை விதிக்கக் கோரி, சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கின்றன.
இதற்கிடையில், தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி மோதல்களையும், கலவரத்தையும் அடக்கிய பெருமை, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாங்கிட்டுக்கு உண்டு. படத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதி தலைவரை, ஜாங்கிட் போல முறுக்கு மீசை வைத்திருக்கும் போலீஸ் அதிகாரி தலைமையில் சுட்டுக் கொல்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அந்த ஜாதி தலைவரை 'என்கவுன்டர்' செய்தது வேறு அதிகாரி.
இது குறித்து, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள விமர்சனம்:
கபடி வீரன் கதையை சொன்ன மாரி செல்வராஜ், கடைசி வரை அந்த காலத்தில் ரவுடிகளை அடக்கி அமைதியை கொண்டு வந்த எஸ்.பி., ஜாங்கிட் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அது என்னவோ தெரியவில்லை. இந்த புரட்சி, புண்ணாக்கு படங்கள் எல்லாம், போலீஸ் துறையின் பெருமையை சொல்ல மறந்து விடுகிறது.
கபடி வீரன் கதை நடந்த காலங்களில் தான், பெரிய பெரிய ஜாதி கலவரங்கள், தென் மாவட்டங்களில் நடந்தன. அதையெல்லாம் மிக துணிச்சலாக அடக்கிக் காட்டியவர் ஜாங்கிட். இதையெல்லாம் படத்தில் மறைப்பதன் பெயர் தான் புரட்சி என்றால், எப்படி இருக்கும் படம்?
உண்மை வரலாற்றை திட்டமிட்டு மறைக்கும் மாரி செல்வராஜ் போன்றவர்களின் செயல்பாடுகளை, சமூகம் என்றைக்கும் மன்னிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அ.தி.மு.க., - எம்.பி.,யும் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலருமான இன்பதுரை வெளியிட்ட பதிவு:
படத்தில் தன்னுடைய நிஜமான வலியைத்தான் கடத்தியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். ஆனால், பைசன் படத்தின் நிஜ நாயகனான மணத்தி கணேசன் உள்ளிட்ட மூன்று கபடி வீரர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயோடு வீடும் வழங்கி உதவியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 1994, நவ. 9ல், இதை நேரில் வழங்கி பாராட்டினார்.
இது போல விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர், முன்னாள் முதல்வர் பழனிசாமி. இந்த வரலாற்று உண்மைகளை மறைக்காமல் மாரி செல்வராஜ் சொல்லி இருந்தால், வரலாற்றுக்கும் வலி இருந்திருக்காது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- நமது நிருபர் -