sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

நல்லகண்ணுவுக்கு ஜெயலலிதா அளித்த மரியாதை!

/

நல்லகண்ணுவுக்கு ஜெயலலிதா அளித்த மரியாதை!

நல்லகண்ணுவுக்கு ஜெயலலிதா அளித்த மரியாதை!

நல்லகண்ணுவுக்கு ஜெயலலிதா அளித்த மரியாதை!

12


UPDATED : பிப் 26, 2026 11:35 AM

ADDED : பிப் 26, 2026 06:58 AM

Google News

12

UPDATED : பிப் 26, 2026 11:35 AM ADDED : பிப் 26, 2026 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான நல்லகண்ணு, 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் கோவையில் போட்டியிட்டார். அச்சமயம் இ.கம்யூ., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்தது.

வ.உ.சி., மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., ஆதரவு கோரி பிரசாரம் செய்தார். வழக்கமாக ஜெ., பங்கேற்கும் தேர்தல் கூட்டங்களில், அவருக்கு மட்டும் ஒரே ஒரு இருக்கை போடப்படும். கட்சி வேட்பாளர்கள் இரு கரம் கூப்பிக் கொண்டு, கூட்டம் முடியும் வரை நின்று கொண்டிருப்பர்.

அன்றைய தினம் என்ன நடக்கும் என்கிற மனநிலையில் கட்சியினர் திக்... திக்... மனநிலையில் காணப்பட்டனர். நல்லகண்ணு சிறிது நேரம் நின்றிருந்தார். மேடைக்கு வந்த ஜெ., அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கூறி, நல்லகண்ணுவுக்கு இருக்கை வரவழைத்து, அமர வைத்தார்.

அதேநேரம், அ.தி.மு.க., வேட்பாளர் நின்றிருந்தார். இது, கோவை மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. நல்லகண்ணு மீது ஜெ., வைத்திருந்த மரியாதை வெளிப்பட்டதோடு, அவர் யார் என்பதை மக்களை பேச வைத்தது. 43 சதவீத ஓட்டுகளை (3.76 லட்சம்) பெற்றபோதிலும், பா.ஜ.,வினரின் வேறு விதமான பிரசாரத்தால் தோல்வியை தழுவினார்.

தேர்தல் பிரசார காலத்தில், அவருடன் பயணித்தவர், இளைஞர் பெருமன்ற மாவட்ட முன்னாள் செயலாளர் மணிபாரதி. அவருடன் பேசிய போது...

நல்லகண்ணு மிகவும் எளிமையானவர். தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், இரு மாதம் சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் தங்கினார். நிர்வாகிகளுடன் தரையில் பாய் விரித்து உறங்குவார். ஹோட்டலில் ரூம் எடுத்தால், ஒத்துக்கொள்ள மாட்டார்.

கட்சி அலுவலகம் அருகே அன்னபூரணி என்பவர், வீட்டிலேயே டிபன் தயாரித்து விற்கிறார். அவரிடம் தோசை வாங்கிச் சாப்பிடுவார். இரவிலும் தோசை தான். மதியம் மெஸ் சாப்பாடு வரும். குறைந்த அளவே எடுத்துக் கொள்வார். எப்போதாவது ஆப்பம் சாப்பிடுவார். மறுநாள் அணிய வேண்டிய ஆடைகளை, முந்தைய நாள் இரவு அவரே துவைத்து காய வைப்பார்.

தேர்தலில் போட்டியிடும் வரை, கோவை மக்களுக்கு அவரை பற்றிய பரிச்சயம் இல்லாமல் இருந்தது. 8 ஆண்டு சிறை வாழ்க்கை; 7 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை போன்ற தியாகங்கள் பற்றி தெரியாமல் இருந்தனர். அதை மக்களிடம் எடுத்துச் சென்றோம். நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிய செய்திகளும், அவரது எளிமையும் மக்களிடம் சேர்ப்பித்தது.

ஜெ., கொடுத்த முக்கியத்துவம் திரும்பிப் பார்க்க வைத்தது. கடைசி நேரத்தில் பிரசாரத்தை எதிரணியினர் வேறு விதமாக திருப்பி விட்டனர். இல்லையெனில், அவர் வெற்றி பெற்று, எம்.பி.,யாகி இருப்பார்.

எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிறுத்த மாட்டார். பொது பிரச்னைகளில் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து விட்டார் எனில், பின்வாங்க மாட்டார்; சமரசத்துக்கு அவரிடம் இடமில்லை. எந்த ஒரு சூழலிலும் எந்த ஒரு தலைவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்ததே இல்லை. இரு மாதத்துக்கு முன் சென்னை சென்று சந்தித்து விட்டு வந்தேன். இவ்வாறு, கூறினார்.

திருப்பூர் மக்கள் மறக்க முடியாத நல்லகண்ணு


நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், முதன் முறையாக சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், நல்லகண்ணுவை புகழ்ந்து பேசியதை, திருப்பூர் மக்கள் நினைவு கூறுகின்றனர்.

திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக கடந்தாண்டு, அக். மாதம் சொந்த ஊரான திருப்பூருக்கு வந்தார். அவருக்கு தொழில் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், ''நல்லகண்ணு போன்ற மூத்த தலைவரை தோற்கடித்தது வருத்தமளிக்கிறது'' எனக் குறிப்பிட்டு பேசினார்.

நேற்று, முதுபெரும் இ.கம்யூ., தலைவர் நல்லகண்ணு, காலமானதை தொடர்ந்து, திருப்பூர் மக்கள், துணை ஜனாதிபதியின் பேச்சை நினைவு கூர்கின்றனர். கடந்த, 1999 லோக்சபா தேர்தலில் கோவை லோக்சபா அ.தி.மு.க. கூட்டணியில், இ.கம்யூ. வேட்பாளராக நல்லகண்ணு போட்டியிட்டார். அவரை எதிர்த்து சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

ஒரே சட்டை


இ.கம்யூ. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி கூறியதாவது: கடந்த, 1999 தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட நல்ல கண்ணு, திருப்பூரில் பிரசாரத்துக்கு வரும் போது, என் வீட்டில் தங்குவார். அப்போது நான், கட்சியின் வட்டார செயலாளராக இருந்தேன். அவர் ஒரே ஒரு சட்டையுடன் தான் வந்தார். அவரை தையல் கடைக்கு அழைத்து சென்று, அளவெடுத்து, நான்கு சட்டை தைத்துக் கொடுத்தோம்.

அதை பயன்படுத்தி, அதை அவரே காலையில் எழுந்து துவைப்பார். ''பிரசாரத்துக்கு நேரமாகிவிட்டது; வேட்டி, சட்டையை துவைத்துக் கொண்டிருக்கிறீர்களே'' எனக் கேட்டால், ''வேலை செய்தால் தான் சாப்பிட முடியும்'' என்பார். பின், கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜீப்பில் பிரசாரத்துக்கு செல்வார்.

பார்க்க மிக எளிமையாக எதுவும் தெரியாதவர் போல் இருந்தாலும், ஆங்கிலத்தில் சிறப்பாக பேசுவார். உலக விஷயங்களையும் விரிவாக அலசுவார். எங்களையும் நன்றாக படிக்க சொல்வார்; உலக வரலாறு, தத்துவங்களை ஆழமாக படிக்க சொல்வார். மக்களுடன் எளிமையாக இருக்க வேண்டும். வசதியை காண்பிக்க கூடாது' என்பார்.

தோல்வி சாதாரணம்


தேர்தலில் தோற்ற பின், அவர் கூறியது இதுதான்: காமராஜர் ஆட்சியில், பழுதடைந்த வீட்டில் வசித்த எம்.எல்.ஏ. ஜீவாவிற்கு, வீடு ஏற்பாடு செய்து கொடுக்க காமராஜர் முற்பட்டார். ஆனால், மக்கள் கஷ்டப்படும் போது அந்த வீடு வேண்டாம் என மறுத்தார் ஜீவா. அப்படிப்பட்ட தியாக வாழ்க்கை வாழ்ந்தவரையே மக்கள் தோற்கடித்து விட்டனர்; நானெல்லாம் தோற்றதில் ஆச்சர்யமில்லை என்றார். தனது தோல்வியை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். தேர்தலில் தோற்றாலும் மக்களை வெறுக்க கூடாது; அவர்களுக்காக பாடுபட வேண்டும் என்றார்.இவ்வாறு, ரவி கூறினார்.

திருப்பூருக்கு புகழாரம்


திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் கூறியதாவது; இ.கம்யூ. முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, இலக்கிய கூட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்பார். கடந்த, 10 ஆண்டுக்கு முன், நான் எழுதிய படைப்புகள் தொடர்பான ஒரு கூட்டம் திருப்பூரில் நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக நல்லக்கண்ணு பங்கேற்றார். அதற்கு முன் நான் எழுதிய புத்தகங்களை வாங்கி, முழுவதுமாக, ஆழமாக படித்தார். கூட்டத்தில், எந்தவொரு குறிப்பும் இல்லாமல் பேசினார்.

அக்காலகட்டங்களில் திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில், 8 மணி நேர வேலை தான் அனுமதிக்கப்பட்ட நேரம்; பின், அது, 10 மணி நேரமாக மாறியது. 'ஆர்டர்' அதிகமாக இருக்கும் போது, 'ஓவர் டைம்' என்ற வகையில் நள்ளிரவு, 12:00 மணி, அதைத்தாண்டி விடிய, விடிய கூட தொழிலாளர்கள் வேலை செய்வார்கள்; குறிப்பாக, பெண் தொழிலாளர்களும் கடினமான உடல் உழைப்பை கொடுப்பார்கள் என்பது போன்ற திருப்பூர் தொழிலாளர்கள் நிலையை எழுதியிருந்தேன். விடிய விடிய வேலை செய்வதை 'வெடி நைட்' என தொழிலாளர்கள் பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு; இதுவும் என் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

இதைக் குறிப்பிட்டு பேசிய நல்லகண்ணு, 'உலகில் எங்குமில்லாத வகையில் இங்குள்ள தொழிலாளர்கள் விடிய விடிய வேலை செய்து, அன்னிய செலாவணியை ஈட்டி, நகரின் வளர்ச்சியை மேம்படுத்துகின்றனர்; மக்களின் உழைப்பு அபாரம்'' என குறிப்பிட்டு பேசினார். அதே நேரம், உழைப்பு சுரண்டல் கூடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை. தொழிலாளர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிப்பது தான் அவரின் தனிச்சிறப்பு. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us