வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு
வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு
ADDED : ஜூலை 11, 2025 02:29 AM

கடந்த 2011 -- 15 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், செந்தில் பாலாஜி மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் சமரசமாக போக விரும்புவதாக கூறியதை ஏற்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தர்மராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், 'சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பத்தி 45 மற்றும் 46ல் தனக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் விசாரணை நீதிமன்ற நடைமுறைகளை பாதிக்கும் வகையில் உள்ளது.
மேலும், அரசியல்சாசனப் பிரிவு 21ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் அவற்றை நீக்கி உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது
-டில்லி சிறப்பு நிருபர்-.