நடிகர் விஜயை தொடர்ந்து ஜான்; சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பு?
நடிகர் விஜயை தொடர்ந்து ஜான்; சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பு?
ADDED : ஜன 18, 2026 05:33 AM

சென்னை: 'த.வெ.க., தலைவர் விஜயின் ஆலோசகரும் , கட்சியின் வியூக வகுப்பாளருமான ஜான் ஆரோக்கியசாமிக்கு, விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்படும்' என தெரிகிறது.
கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவர்களின் விசாரணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
ஏழு மணி நேரம்
அவர்கள், டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில், விஜய் மற்றும் தமிழக காவல் துறையின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரிடம், கடந்த 12ம் தேதி, ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, விஜயிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், ஜன., 19ல் மீண்டும் ஆஜராக வேண்டும் என, சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி அவர், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, த.வெ.க., வியூக வகுப்பாளரும், நடிகர் விஜயின் ஆலோசகருமான ஜான் ஆரோக்கியசாமியையும் விசாரணைக்கு அழைக்க முடிவெடுத்திருப்பதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறின.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
நடிகர் விஜயின் பிரசார பயண கூட்டங்களை திட்டமிட்டதில், ஜான் ஆரோக்கியசாமியின் பங்கு முக்கியமானது. அவர் வடிவமைத்துக் கொடுத்த திட்டத்தின் அடிப்படையிலேயே, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விஜய் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார்.
கரூர் சென்ற விஜயின் வாகனத்தை, அனுமதிக்கப்பட்ட இடத்தை கடந்து சென்று நிறுத்தி, மக்கள் மத்தியில் பேசுமாறு கட்சியினருக்கும், வாகனத்தை இயக்கிய டிரைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் அனுமதித்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி விஜய் பேசினால் , அங்கு திரண்டிருக்கும் எதிர்ப்பாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி, வாகனத்தை நோக்கி கற்கள் வீசக்கூடும்.
எப்படி கிடைத்தது?
எனவே, வாகனத்தை தள்ளி நிறுத்த வேண்டும் என ஜான் ஆரோக்கியசாமி தான் உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையிலேயே வாகனம் தள்ளி நிறுத்தப்பட்டுள்ளது. இதை, ஏற்கனவே விசாரணைக்கு சென்ற த.வெ.க.,வினர் விசாரணையின் போது கூறியுள்ளனர்.
கற்கள் வீசப்படும் என்ற தகவல் ஜான் ஆரோக்கியசாமிக்கு எப்படி கிடைத்தது; அப்படியென்றால், அந்த தகவலை அவரிடம் கூறியது யார்? தகவலின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.
அதையடுத்தே, ஜான் ஆரோக்கியசாமியை விசாரணைக்கு அழைக்க முடிவெடுத்திருக்கிறோம். விரைவில், அவருக்கும் சம்மன் அனுப்பப்படும். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

