கூட்டுக்குழு 5 மாநிலங்களுக்கு பயணம்: குளிர்கால தொடரில் அறிக்கை தாக்கல் வக்பு மசோதா
கூட்டுக்குழு 5 மாநிலங்களுக்கு பயணம்: குளிர்கால தொடரில் அறிக்கை தாக்கல் வக்பு மசோதா
ADDED : நவ 02, 2024 01:23 AM

வக்பு சட்ட மசோதாவை ஆய்வு செய்து வரும் ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு, மேலும் பல்வேறு தரப்புகளின் கருத்துக்களை கேட்டறிவதற்காக, வரும் 9 முதல் 14 வரையிலான ஆறு நாட்களுக்கு ஐந்து மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒன்பது மாநிலங்களின் வக்பு வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளது.
ஆலோசனை
வரும் குளிர்கால கூட்டத்தொடரில், வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக இந்த மசோதாவை ஆய்வு செய்து வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆலோசனை, அதிவேகத்தில் அரங்கேறி வருகிறது.
டில்லி பார்லிமென்ட் அனெக்ஸ் கட்டடத்தில் நடைபெறும் ஆலோசனைகளில், பா.ஜ.,வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் அமளி ஏற்படாத நாளே இல்லை என்ற அளவில், காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
ஆனாலும், எதிர்க்கட்சி களால் எந்த ஒரு அலுவலையும் முடக்க முடியாத அளவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில்தான், மேலும் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று கருத்துக்களை கேட்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 9ல் அசாம் மாநிலம் குவஹாத்தியில் துவங்கும் ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடந்து, 14ம் தேதி லக்னோவில் முடிவு பெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு அசாம் மட்டுமல்லாது, அருகில் உள்ள மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் வக்பு வாரிய நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 12ல் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஆய்வுக்கூட்டம் நடக்கவுள்ளது. கோல்கட்டாவில் நடக்கும் கூட்டத்தில், ஜார்க்கண்ட் மாநில வக்பு வாரிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதன்பின், 13ல் பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு, இறுதியாக, 14ல், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தனது ஆய்வுக்கூட்டத்தை முடித்து சுற்றுப்பயணத்தை இறுதி செய்யவுள்ளது.
இந்த கூட்டங்களில், அந்தந்த மாநில பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடைபெறவுள்ளன.
மேலும், அந்தந்த மாநிலங்களின் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளிடமும் பல்வேறு கருத்துக்களை கேட்டறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு ஆய்வுக்கூடம்
இதற்கிடையில், அடுத்த வாரம் 5 மற்றும் 6 தேதிகளில் முழு அளவிலான இரு ஆய்வுக்கூட்டங்களை, பார்லிமென்ட் கூட்டுக்குழு டில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. அதில், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அடுத்தடுத்து நடக்கவுள்ள ஆய்வுக் கூட்டங்களின் முடிவுகளை அடிப்படையாக வைத்து, விரிவான அறிக்கை செய்யப்பட்டு, வரும் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்க கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது
- நமது டில்லி நிருபர் -.

