தி.மு.க., மூத்த தலைவர்களுக்கு 'கல்தா': உதயநிதியின் தனி 'லிஸ்ட் ரெடி'
தி.மு.க., மூத்த தலைவர்களுக்கு 'கல்தா': உதயநிதியின் தனி 'லிஸ்ட் ரெடி'
UPDATED : ஆக 11, 2025 07:26 AM
ADDED : ஆக 11, 2025 04:22 AM

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க முடிவெடுத்திருக்கும் கட்சியின் இளைஞர் அணி செயலர் உதயநிதி, 'சர்வே டீம்' வாயிலாக, தொகுதிக்கு மூவர் அடங்கிய பட்டியலை தேர்வு செய்து, கையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க., இளைஞர் அணி செயலராக உதயநிதி நியமிக்கப்பட்டதில் இருந்து, 'கட்சியின் ஆதாரமே இளைஞர் அணி தான்; கட்சி, ஆலமரமாக வளர்ந்திருப்பதற்கு அச்சாணியே இளைஞர் அணி தான்.
'அதனால், கட்சியின் முக்கிய பொறுப்பு மற்றும் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு ஆகியவற்றில் இளைஞர் அணியைச் சேர்ந்தோருக்கே கொடுக்க வேண்டும்' என, கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார்.
பல கட்ட ஆலோசனை
அதன் அடிப்படையில், இளைஞர் அணியைச் சேர்ந்தோர் சிலருக்கு, கட்சிப் பொறுப்புகளிலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், இளைஞர் அணியினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் ஆகி உள்ளனர்.
தற்போது, இளைஞர் அணி பொறுப்போடு, துணை முதல்வர் பதவியையும் வைத்திருக்கும் உதயநிதி, கட்சியை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பை தனதாக்கிக் கொள்ள நினைக்கிறார்.
அதற்கேற்ப, வரும் சட்டசபைத் தேர்தலில், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இளைஞர் அணியைச் சேர்ந்தோருக்கு, அதிக அளவில் போட்டியிட வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளார்.
இதற்காக, அடிக்கடி கட்சியின் இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகத்துக்கு வரும் உதயநிதி, சட்டசபைத் தொகுதி வாரியாக பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
தி.மு.க., இளைஞர் அணி வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, அவரைச் சுற்றிலும், சீனியர்களான அன்பழகன், வீராசாமி, நாஞ்சில் மனோகரன், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் இருப்பர். அவர்களை ஆலோசித்தே கருணாநிதி முக்கிய முடிவெடுப்பார்.
கட்டாய ஓய்வு
தற்போது கட்சியை வழி நடத்தும் முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து, உதயநிதியும் அதே நிலையையே தொடருகிறார். மகேஷ், சிற்றரசு, ஜோயல் என தனக்கென விசுவாசக் கூட்டம் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கும் உதயநிதி, அவர்கள் ஆலோசனைப்படி செயல்படுகிறார்.
'கட்சியில் மூத்த தலைவர்களாக இருப்போரை, கட்டாயம் ஓய்வுக்கு அனுப்ப வேண்டும்; கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும்' என, உதயநிதியின் எண்ணத்துக்கு உரமேற்றி உள்ளது, அந்த விசுவாசக் கூட்டம்.
அதன்படி, மூன்று முறைக்கு மேல் எம்.எல்.ஏ.,க்களாக இருப்போரையும், மூத்த அமைச்சர்களாக இருக்கும் துரைமுருகன், பன்னீர்செல்வம், பெரியசாமி, உள்ளிட்டோரையும், பொன்முடி, மைதீன்கான் போன்ற பலரையும் தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்கக் கேட்டுக் கொள்வது என உதயநிதி முடிவெடுத்துள்ளார்.
தலா மூவர்
'மூத்த தலைவர்கள் ஆசியோடு, நிறைய புதிய இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கலாம்' என தலைமைக்கு எடுத்துச் சொல்லி இருக்கும் உதயநிதி, 'இப்படி செய்தால் தான், புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய் உள்ளிட்டோ ரை, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியும்' என்றும் சொல்லி உள்ளார்.
மேலும், 'சர்வே டீம்' வாயிலாக, அனைத்து சட்டசபை தொகுதிகளின் கள நிலவரத்தையும், புள்ளி விபரங்களுடன் உதயநிதி பெற்றுள்ளார். அந்த சர்வே டீம், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூவர் வீதம், 'போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புள்ள இளைஞர்கள்' என ஒரு பட்டியலை உதயநிதியிடம் கொடுத்துள்ளனர்.
அவர்களின், கடந்த கால கட்சி செயல்பாடு, குடும்பப் பின்னணி, மக்கள் செல்வாக்கு, பண பலம் உள்ளிட்டவைகளும் அந்த பட்டியலோடு இணைக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்போருக்கே, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
-நமது நிருபர்-