காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
ADDED : ஜூலை 19, 2025 04:03 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்து விட்டதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
ஆனால், “முற்றுப்புள்ளி வைப்பதற்கு அது ஒன்றும் வர்த்தகம் அல்ல; உணர்வுபூர்வமானது,” என, த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
காமராஜரை பற்றி தவறாக பேசிய தி.மு.க., - எம்.பி., சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழகம் முழுதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவாவை கைது செய்யக்கோரி, முன்னாள் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு தலைமையில் காங்கிரசார், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, அருள் அன்பரசு கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் தேசிய அடையாளம் காமராஜர். அவர் மீது சேற்றை வீசிய சிவா மீது, தி.மு.க., நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளோம்.
''நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தான் போராட்டமே தவிர, அரசுக்கு எதிராக அல்ல,'' என்றார்.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் நேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க., - எம்.பி., பாலு ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
பின், செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்து போனது. 17ம் தேதி காலையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சி மீது, அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை? டில்லியில், காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்., இப்போது வேடம் போடுகிறது.
தற்போது, ஓட்டுக்காக காமராஜருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என, வேடம் போடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
செல்வப்பெருந்தகைக்கு பதிலடி தரும் வகையில், த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அளித்த பேட்டி:
காமராஜரை தவறாக பேசிய விவகாரத்தில், ஒரே இரவில் முற்றுப்புள்ளி வைக்க அது வர்த்தகம் அல்ல. செல்வப்பெருந்தகை தலைவராக அமர்ந்திருக்கும் இடம் காமராஜர் சொத்து.
அவர் வாங்கிய நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு காங்கிரசார் திட்டமிட்டுகின்றனர். ஆனால், காமராஜரை இழிவாக பேசியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த, காங்கிரசார் முன்வராதது ஏன்?
தி.மு.க., தரும் 15, 20 சீட்டுகளுக்காக, காங்கிரஸ் கட்சியையும், காமராஜரின் புகழையும் அடகு வைக்க துணிந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.