தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டும் கார்த்தி; இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு விருந்து
தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டும் கார்த்தி; இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு விருந்து
ADDED : மார் 24, 2025 05:52 AM

காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு விருந்து அளித்துள்ளார். தன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். தலைவர் பதவிக்கு அவர் மல்லுக்கட்டுவதால், காங்கிரசில் கோஷ்டி பூசல் தீவிரம் அடைந்துள்ளது.
விழிபிதுங்கல்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சிதம்பரம், மறைந்த இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், அழகிரி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் போன்றோருக்கு, தமிழகம் முழுதும் காங்கிரசில் ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்களை தவிர, 'வாரிசு' அடிப்படையில் கார்த்தி, விஷ்ணுபிரசாத், விஜய் வசந்த் எம்.பி., என, ஏழெட்டு இளம் கோஷ்டி தலைவர்களும் உள்ளனர்.
இளங்கோவன் மறைவுக்கு பின், அவரது ஆதரவாளர்கள், எந்த தலைவர் பின்னால் செல்வது என தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். இளங்கோவனின் நெருங்கிய நண்பராக இருந்த, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் நாசே ராமச்சந்திரனை தலைவராக ஏற்று செயல்பட, மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு, தி.நகரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கார்த்தி நேற்று மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், இறா தொக்கு என, 14 வகை உணவுகளுடன் விருந்து அளித்தார். சென்னையைச் சேர்ந்த முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ரங்கபாஷ்யம், சிவராமன், ஏ.ஜி.சிதம்பரம் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கார்த்தி ஆதரவாளர்களில், தி.நகர் ஸ்ரீராம், அருள்பெத்தையா, ரவிராஜ், மனோகரன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அடுத்து, சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில், மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமையில், இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் செல்வப்பெருந்தகை பங்கேற்றார்; கார்த்தியை அழைக்கவில்லை. குரோம்பேட்டையில், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் கார்த்தி பங்கேற்றார்.
இணைந்த கைகள்
இந்நிகழ்ச்சிக்கு செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களான, தாம்பரம் நாராயணன், அசோகன் போன்றோர் அழைக்கப்படவில்லை. இதனால் கோஷ்டி பூசல் தீவிரமாகி உள்ளது. இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு விருந்து அளித்த கார்த்தி, அவர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.
அப்போது, 'சென்னையில் உள்ள, இளங்கோவன் ஆதரவாளர்களை சந்திக்க விருந்து ஏற்பாடு செய்தேன். உங்கள் பெயர்களை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யாரையும் நேரில் பார்த்து பழகியதில்லை. உங்கள் அனைவரையும், என்னுடன் பயணிக்க அழைக்கிறேன். 'நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவோம். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும்.
'கடந்த முறை 25 சீட்டுகள் கிடைத்தன. 18 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது. டில்லி தலைமை, சீட்டுகள் அதிகமாக கேட்டு வாங்கி தந்தால் தான், போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். 'சீட்டு அதிகமாக வாங்க, கட்சியை பலப்படுத்த வேண்டும். அதனால், அனைவரும் ஒருமித்த கருத்துடன், இணைந்த கைகளாக பணியாற்ற வேண்டும்' என, அவர் வேண்டுகோள் விடுத்ததாக, விருந்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -