அறுபடை வீடுகளுக்கு காவடி யாத்திரை: தயாராகிறது ஹிந்து முன்னணி
அறுபடை வீடுகளுக்கு காவடி யாத்திரை: தயாராகிறது ஹிந்து முன்னணி
ADDED : ஜூலை 24, 2025 06:41 AM

சென்னை: முருக பக்தர்கள் மாநாட் டின் வெற்றியை தொடர்ந்து, முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கு, காவடி யாத்திரை நடத்த, ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஹிந்து அமைப்புகள் தயாராகி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில், முதல் வீடான, மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில், சில அமைப்புகள் ஆடு, கோழி பலியிடப் போவதாக அறிவித்தன. இது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்., 4ல், மதுரையில் ஹிந்து முன்னணி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அரசின் தடையை மீறி, உயர் நீதிமன்ற அனுமதியுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தன்னெழுச்சியாக திரண்ட கூட்டம், ஹிந்து அமைப்புகளை உற்சாகப்படுத்தின.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை, ஹிந்து முன்னணி நடத்தியது. வி.எச்.பி., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும் பா.ஜ.,வும் தீவிர பணிகளில் ஈடுபட்டதால், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்.
இந்த மாநாட்டால் எழுந்த, ஹிந்து எழுச்சியை தக்க வைக்கவும், முருகனை மையமாக வைத்து, ஹிந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தவும், புகழ் பெற்ற முருகன் கோவில்களுக்கு, குறிப்பாக அறுபடை வீடுகளுக்கு, காவடி யாத்திரை நடத்த, ஹிந்து முன்னணி, வி.எச்.பி., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
முருகன் கோவில்களுக்கு, காவடி எடுத்து செல்வது, தமிழகத்தில் காலங்காலமாக நடந்து வருகிறது. தைப்பூசம் நாளில், அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, அனைத்து முருகன் கோவில்களுக்கும், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
வட மாநிலங்களில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், பல லட்சக்கணக்கான சிவ பக்தர்கள், ஹரித்துவார், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு, 'கன்வர்' யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
வாரணாசி விஸ்வநாதர் கோவில் சீரமைக்கப்பட்ட பின், ஒவ்வொரு ஆண்டும் காவடி யாத்திரை, உ.பி.,யில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவடி யாத்திரைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
காவடி யாத்திரையை, அரசியல் ஆயுதமாக பா.ஜ., பயன்படுத்தி வருவதாக, அம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே போன்று, தமிழகத்தில் முருகன் காவடி யாத்திரையை, பெரும் விழாவாக மாற்ற, ஹிந்து அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. இனி வரும் ஆண்டுகளில், தைப்பூசம் அல்லது பங்குனி உத்திரம் நாளில், தமிழகம் முழுதும் காவடி யாத்திரையை நடத்த, தயாராகி வருவதாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.