சிறுவாணி குடிநீருக்கு சிக்கல்: கேரளா திடீர் நிபந்தனை!
சிறுவாணி குடிநீருக்கு சிக்கல்: கேரளா திடீர் நிபந்தனை!
UPDATED : மார் 27, 2013 01:12 AM
ADDED : மார் 27, 2013 01:07 AM

கோவை: கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நிரந்தர நீர் இருப்பு தண்ணீரை குடிநீர் உபயோகத்திற்கு எடுக்க, கேரளா அரசு திடீர் நிபந்தனை விதித்துள்ளது.
கோவை மக்களுக்கு குடிநீர் வழங்க, கடந்த 1889ல் சிறுவாணி திட்டம் பரிசீலிக்கப்பட்டு, கடந்த 1929ல் சிறுவாணி வனப்பகுதியில் முத்திகுளம் பள்ளத்தாக்கில், தடுப்பணை கட்டி, கோவைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது. கடந்த 1977 - 83ல், கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட சிறுவாணி வனத்தில், அணை கட்டப்பட்டு, 22.4 சதுர கிலோமீட்டர் பரப்பில் தண்ணீர் தேக்கப்பட்டது. அணையில் 650 மில்லியன் கனஅடி வீதம், ஆண்டுக்கு இருமுறை நிரம்பும் என்ற எதிர்பார்ப்பில் அணை கட்டப்பட்டது. இருமாநில ஒப்பந்தப்படி, கோவை மாநகராட்சியில் இருந்து சிறுவாணி அணை பராமரிப்புக்காக, கேரளா அரசுக்கு, ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சிறுவணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, கோவை மாநகராட்சி, வழியோர கிராமங்கள், சூலூர் விமானப்படை தளத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கோவை மாநகராட்சிக்கு தினமும் 85 எம்.எல்.டி., தண்ணீர் வழங்க வேண்டும்.
கடந்தாண்டு மழை பொய்த்ததால், ஆண்டுக்கு இரண்டு முறை நிரம்பும் சிறுவாணி அணை ஒரு முறை கூட நிரம்பவில்லை. கடந்த ஜன., முதல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த 22ம் தேதி, அணையினுள் இருக்கும் நீர் உறிஞ்சு கிணற்றில் நான்கு வால்வுகளும் வெளியே தெரிந்தது. அதன்பின், நீர்உறிஞ்சு கிணற்றில் பைபாஸ் வழியாக குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் எடுக்கிறது.
இந்நிலையில், கேரளா மாநிலம் பாலக்காட்டில், தமிழக - கேரளா அதிகாரிகளை
உள்ளடங்கிய, 'சிறுவாணி திட்ட ஒருங்கிணைப்பு கட்டுப்பாடு வாரியத்தின்'
ஆலோசனை கூட்டம் நேற்று முன்
@nextcolumn@
தினம் நடந்தது. கேரளா நீர்ப்பாசன தலைமை பொறியாளர் லத்திகா தலைமையில் நடந்த கூட்டத்தில், கேரளா நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் (சிறுவாணி திட்டம்) கலந்து கொண்டனர். கேரளா அதிகாரிகள் பேசும்போது, 'கேரளாவிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. பி.ஏ.பி., திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் கிடைக்காததால் பாசனம் பாதிக்கிறது. ஆழியாறு அணையில் தண்ணீர் வழங்கும் அளவை குறைத்ததால், பாலக்காடு மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கினால், சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் வழங்கப்படும்' என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
தமிழக குடிநீர்
வடிகால் வாரிய அதிகாரிகள் பேசுகையில், 'கேரளாவின் கோரிக்கை பதிவு
செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும். பி.ஏ.பி., நதி நீர்
பங்கீடு பேச்சு நடக்கும் போது, ஆழியாறு தண்ணீர் வழங்குவதில் உள்ள
பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். சிறுவாணி அணையில் இருக்கும் தண்ணீரை
கொண்டு, கோவை மாநகராட்சி, வழியோர கிராமங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு
குடிநீர் வழங்க வேண்டும். அதனால் அணையில் இருக்கும் தண்ணீரை எடுக்க
அனுமதிக்க வேண்டும். அணையினுள் ஆழ்குழாய்
கிணறு அமைக்க பரிசீலிக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து, 'சிறுவாணி வனப்பகுதியில் உள்ள வனவிலங்களுக்கு குடிநீர் ஆதாரம் பாதிக்காமல், அணையில் இருந்து 861.5 மீட்டர் நீர்மட்டம் வரையிலும் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகு, சிறுவாணியில் தண்ணீர் எடுக்க வேண்டுமானாலும், அணையினுள் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் தமிழக முதல்வர், கேரளா முதல்வரிடம் பேச்சு நடத்தி அனுமதி பெற வேண்டும்' என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தினமும் 15 - 20 எம்.எல்.டி., அளவுக்கு தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் இறுதி வரை தண்ணீர் எடுக்கலாம். சிறுவாணி வனப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்யாமல் இருந்ததில்லை. அதனால், இயற்கை நிச்சயம் கை
@nextcolumn@ கொடுக்கும்' என்றார். சிறுவாணி அணையில் நேற்றைய
நிலவரப்படி 862.65 மீட்டர் நீர்மட்டம் உள்ளது. பேச்சுவார்த்தை
நிபந்தனைப்படி, சிறுவாணியில் இருந்து இன்னும் 1.15 மீட்டர் அளவுக்குள்ள
தண்ணீரை மட்டுமே எடுக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
முரண்பாடான பேச்சு: அதிகாரிகள் கலக்கம்: தமிழக
- கேரளா இடையே பி.ஏ.பி., முல்லைப்பெரியாறு நதிநீர் பங்கீடு பிரச்னை
உள்ளது. கோவையின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட சிறுவாணி அணையில்
கேரளாவுக்கு எந்த பங்கீடும் இல்லை. தமிழக அரசால் அணை கட்டப்பட்டு, கோவை
மாநகராட்சி நிதியில் பராமரிக்கப்படுகிறது. அங்குள்ள, வனக்காவலர்கள்,
நீர்ப்பாசனத்துறையினருக்கு கோவை மாநகராட்சி சம்பளம் வழங்குகிறது.
இந்நிøயில், சிறுவாணி அணையில் நிரந்தர நீர் இருப்பில் தண்ணீர் எடுக்கும்
பேச்சுவார்த்தையில், 'பி.ஏ.பி., திட்டத்தில் ஆழியாறு அணை மூலம் தண்ணீர்
வழங்கினால்தான், சிறுவாணியில் தண்ணீர் எடுக்க அனுமதிப்போம்' என்ற கருத்தை கேரளா அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். ஓரு திட்டத்தின் பேச்சுவார்த்தை நடக்கும் போது, வேறு திட்டத்தில் இருக்கும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, தவறான முடிச்சு போடக்கூடாது. ஒப்பந்தத்திலும் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்திலுள்ள கருத்துகளை கேரளா அதிகாரிகள் மதிப்பதில்லை. கேரளாவின் இந்த அணுகுமுறையால் சிறுவாணி அணையில் தண்ணீர் எடுப்பதில் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் என தமிழக பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தயாராகும் கேரளா! ஆழியாறு அணையில் கேரளாவுக்கு மணக்கடவு வழியாக ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படுகிறது. மழை காலத்தில் ஆழியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சித்தூர் தாலுகாவில் பாரதப்புழா ஆற்றில் நான்கு டி.எம்.சி., தண்ணீர் வீணாகி கடலுக்கு செல்கிறது. மழை காலத்தில் பாரதப்புழாவில் வீணாகும் தண்ணீரை சேமிக்க, தடுப்பணைகள் கட்டவும், பழைய சிற்றணைகளை தூர்வாரவும் கேரளா அரசு ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளது. கம்பாலத்தரா, வெங்கலக்கயம், மீன்கரை, சுள்ளியாறு, குன்னம்பிடாரி சிற்றணைகளை தூர்வார ஆய்வு பணி நிறைவடைந்துள்ளது.
