விமான இயக்கத்தில் வெற்றிக்கொடி கட்டும் கேரளா! வெறுமனே வானத்தை பார்க்கும் தமிழகம்
விமான இயக்கத்தில் வெற்றிக்கொடி கட்டும் கேரளா! வெறுமனே வானத்தை பார்க்கும் தமிழகம்
ADDED : பிப் 15, 2026 01:25 AM

கேரளாவின், 'அல்ஹிந்த் ஏர்' மற்றும் 'ஏர் கேரளா' விமான நிறுவனங்கள், தங்களது விமான இயக்கங்களை, அடுத்த சில மாதங்களில் துவக்க உள்ளன. இதனால், அம்மாநிலத்தின் உள்நாட்டு விமான சேவையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணுார் விமான நிலையங்கள் உள்ளன. அம்மாநில விமான சேவையை வளர்க்கும் வகையில், 'அல்ஹிந்த் ஏர், ஏர் கேரளா' என, இரு விமான நிறுவனங்கள், தற்போது விமானங்களை இயக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட அல்ஹிந்த் குழுமத்தின், 'அல்ஹிந்த் ஏர்' நிறுவனம், விமானங்களை இயக்க, 2025 டிசம்பரில், மத்திய அரசிடம் இருந்து தடையின்மை சான்று பெற்றுள்ளது.
முதல் கட்டமாக, ஏ.டி.ஆர்., 72 ரக சிறிய விமானங்களை, தென் மாநில நகரங்களை இணைக்கும் வகையில், சேவையை துவங்க உள்ளது. பின், ஏர்பஸ் 320 விமானங்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'ஏர் கேரளா' என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். இந்தியாவின் முதல் 'அல்ட்ரா லோ-காஸ்ட்' விமான நிறுவனமாக, இது உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்திற்கு கடந்தாண்டு ஜூனில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தடையின்மை சான்று தந்துள்ளது. இந்நிறுவனமும், ஏ.டி.ஆர்., வகை விமானங்களை உள்நாட்டில் இயக்க உள்ளது.
இந்த இரு விமான நிறுவனங்களின் வருகை, கேரளாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்துச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தையும், ஆரோக்கியமான போட்டியையும் உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு, கேரள அரசின் தொழில் மேம்பாட்டு கழகம் பெரிதும் உதவியுள்ளது. ஆனால், பயணியர் தேவை அதிகம் உள்ள தமிழகத்தில், விமான நிறுவனங்கள் முதலீடு செய்யவும், விமான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், அரசு எந்த முயற்சியும் நான்கரை ஆண்டுகளாக எடுக்கவில்லை.
மெட்ரோ மற்றும் கல்வி விவகாரங்களில் கவனத்தை ஈர்த்து, காரியம் சாதிக்கும் மாநில அரசு, இவ்விஷயத்தில் மவுனமாக இருந்து வருவதாக, விமான போக்குவரத்து வல்லுனர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: உள்நாட்டு விமான நிறுவனங்கள் தமிழகத்தை மதிப்பது கிடையாது. விமான சேவை விரிவாக்க விஷயத்தில் பெயரளவில் மட்டுமே தமிழகத்தை சேர்க்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையின் தேவை உள்ளது.
வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மட்டுமே, இதில் கவனம் செலுத்துகின்றன. தமிழகத்தில் இருந்து கிழக்கு ஆசியா நாடுகளுக்கு நிறைய பேர் செல்கின்றனர்; ஆனால், விமான சேவை குறைவாக உள்ளது. இதை ஆராய்ந்து, விமான நிறுவனங்களுக்கு அனுமதி தந்தால், அவை சேவையை விரிவுபடுத்தும். விமானத் துறையை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

