UPDATED : செப் 08, 2025 11:25 AM
ADDED : செப் 08, 2025 08:46 AM

நீத்தோரும் நினைவிடமும் (கீழ்நமண்டி)
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்தில் உள்ளது கீழ்நமண்டி கிராமம். இங்கு, 55 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட, இரும்பு காலத்தை சேர்ந்த கல்வட்டங்கள் உள்ளன. கடந்த 2023--24ல் முதல்கட்ட அகழாய்வு நடந்தது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2024, ஜூனில் தொடங்கி, கடந்த மே மாதம், அகழாய்வு இயக்குநர் விக்டர் ஞானராஜ் தலைமையில் முடிந்தது.
கோதாவரி முதல் பாலாறு வரை, இறந்தவர்களை புதைப்பதில் ஒரு பண்பாட்டுமுறை கடைபிடிக்கப்பட்டது. இந்த பண்பாடு, வடக்கில் இருந்து படிப்படியாக தெற்கில் உள்ள மனிதர்களுக்கும் பரவியதை கால வரிசையில் அறிய முடிகிறது.
அதன்படி, இறந்தவரையோ, அவருடைய எலும்புகளையோ சுடுமண் தொட்டியில் வைத்து மூடி, குழியில் இட்டு, அதன் அருகில் சடங்கு கலையங்களை அடுக்கி, அவற்றிலும் தொட்டியிலும், அவர் பயன்படுத்திய முக்கிய பொருட்களை வைத்து மண்ணால் மூடினர்.
அந்த இடம், விலங்குகளால் பாதிக்கப்படாத வகையிலும், அடையாளம் காணும் வகையிலும், அதன் மீது, பெரிய கல்லை வைத்து, அதைச் சுற்றி வட்ட வடிவமாக சிறு கற்களை நிரப்பி, அதன் எல்லையில், பெரிய கற்களைப் புதைத்தனர். இவை தான், கீழ்நமண்டியில் காணப்படும் கல்வட்டங்கள். இங்கு கடந்தாண்டும், இந்தாண்டும் அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன.
ஈமப்பேழை
இந்தாண்டு, ஆறு கல்வட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.அதில், மூன்று ஈமப்பேழைகள் முழுமையாகவும், நான்கு ஈமப் பேழைகள் உடைந்த நிலையிலும் மீட்கப்பட்டன. அவை, ஆறு முதல் 12 கால்களுடன், செவ்வக வடிவில், கையால் வனையப்பட்டுள்ளன. அங்குள்ள கலையங்களில், 63க்கும் மேற்பட்ட கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே கிடைத்துள்ள கீறல் குறியீடுகளுடன், இவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளையும் ஒப்பீட்டு ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. இங்கு, கல் கருவியை செய்யும் போது சேகரமாகும் கற் செதில்கள் இப்பகுதியில் அதிகம் சேர்ந்துள்ளன. அவற்றை கல்வட்டங்களில் பரப்பி உள்ளனர். அதுபோல், 500க்கும் மேற்பட்ட கற்செதில்களும், முழுமையடையாத 15க்கும் மேற்பட்ட கற்கோடரிகளும் கிடைத்துள்ளன.
சடங்கு இடம்
புதைப்பிட பகுதிக்கு அருகில், 60 - 70 செ.மீ., ஆழத்தில், மண்பாண்ட ஓடுகள், சமைத்து உண்ட விலங்குகளின் எலும்புகள், மிக மெல்லிய தரைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
இது, புதைப்பதற்கான கற்களை குவிப்பதற்கும்; ஈமப்பேழைகள், கலையங் களை தயாரிப்போர் தங்கி வேலை பார்ப்பதற்கும்; புதைப்பது வரையிலான சடங்குகள் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
வாழ்விடம்
புதைப்பிடம் தவிர, இங்கு, இரண்டு வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டு உள்ளன.
தொழில் பகுதி
இங்கு, பல இடங்களில், இரும்பு உருக்கும் தளப்பகுதிகள் கண்டறியப்பட்டு, நான்கு குழிகள் தோண்டப்பட்டன. அங்கு, இரும்பு உருக்குவதற்கான சுடுமண் காற்றுக்குழாய்களும், இரும்பை பிரித்தபின் கழிக்கப்பட்ட இரும்பு கசடுகளும் கிடைத்துள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில், புதிய கற்கால மனிதர்கள் கற்கோடரிகளை தீட்டிய பள்ளங்களும், கற்கருவி, செதில்களும்கிடைத்துள்ளன.
மலையடிவாரத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டதில், கல்லை கோடரி செய்யும் போது விடப்பட்ட 1,000க்கும் மேற்ப்பட்ட செதில்களின் குவியல்கள் கிடைத்துள்ளன.
தொன்மை
கடந்தாண்டின் கரிமப் பொருட்களை காலக்கணிப்பு செய்தததில், 3,692 ஆண்டுகள் என, தெரியவந்துள்ளது. தற்போதும், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளும், கரிமப்படிவங்களும் சேகரிக்கப்பட்டு, காலக்கணிப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை தவிர, பானை ஓடுகளில் கிடைத்துள்ள குறியீடுகள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்பதால், அவற்றுக்கும் எழுத்து முறை உருவாக்கத்துக்குமான தொடர்புகள் பற்றிய தனித்த ஆய்வுகளும் நடக்கின்றன.
இது குறித்து அகழாய்வு இயக்குநர் விக்டர் ஞானராஜ் கூறியதாவது; கீழ்நமண்டியில், இரும்பு காலத்தைச் சேர்ந்த புதைப்பிடங்கள் மற்றும் வாழ்விடங்களில் அகழாய்வு செய்துள்ளோம். மேலும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தயாரித்த கற்கருவிகள், அவற்றிலிருந்து கழிக்கப்பட்ட செதில்கள், கருவிகளுக்காக கற்களை வெட்டி எடுத்த மலை, கற்கருவிகளைத் தீட்டிய பள்ளங்கள் மற்றும் இரும்பு உருக்கு தளம், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவையும் ஒரே இடத்தில் கிடைத்துள்ளதால், இது முக்கியமான தொல்லியல் இடமாகிறது. ஈமப்பேழைகள் குறித்த ஆய்விற்கும், குறியீடுகள் குறித்த ஆய்விற்கும் இது முக்கியமான இடம். இதன் அருகில், விடால் உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு கால சான்றுகள் கிடைத்துள்ளதால் எதிர்காலத்தில் அகழாய்வு செய்து, வட தமிழகத்தில் புதிய கற்காலம், இரும்பு கால மனிதர்களின் வாழ்வியலை ஓரளவு அறிய முடியும், என்றார்.