UPDATED : ஜன 17, 2024 02:02 AM
ADDED : ஜன 17, 2024 12:23 AM

நாட்டில் ஆயிரம் பிரச்னைகள்... இந்த குப்பைதான் ஒரு பிரச்னையா என்று பலரும் யோசிக்கக்கூடும். நிஜமாகவே குப்பை தான் பெரும் பிரச்னை. மக்கள் தொகையில் மட்டுமில்லை; குப்பைகளை உருவாக்குவதிலும் நாம் உலகில் முதலிடத்துக்கு முன்னேறி வருகிறோம். நாம் உற்பத்தி செய்யும் குப்பைகள் தான், ரோட்டில் குவிகின்றன; கால்வாய்களை அடைக்கின்றன; குளங்களை நிறைக்கின்றன; சூழலை சீர் குலைக்கின்றன.
மலையாக வளர்ந்து, துர்நாற்றத்தையும், மாசுபட்ட மூச்சுக்காற்றையும் பரப்பி, பொது மக்களுக்கு புதுப்புது வியாதிகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகள், சுகாதாரத்துக்கான நடவடிக்கைகள், வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மற்ற எல்லாவற்றுக்குமான திட்டங்களையும் விட, அரசு இப்போது அவசர அவசியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், குப்பை பிரச்னை தான்.
அதற்கான தீர்வுகளுக்காகத் துவக்கப்பட்டதே கோவை குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வு சங்கமான (RAAC --- Residents Awareness Association of Coimbatore) 'ராக்' அமைப்பு. துாய்மை பாரதம் (ஸ்வச் பாரத்) திட்டம், இப்போது தான் கவனம் பெற்றுள்ளது.
குப்பைகளைத் தரம் பிரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிகளை கடந்த 2006-2007 லேயே 'ராக்' துவக்கி விட்டது.
குப்பைகளைக் குறைப்பது, அதைத் தரம் பிரிப்பது, மறு பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே 'ராக்' கின் பிரதான நோக்கம். பல ஆண்டுகளாக, இந்தப் பணிகளை 'ராக் செய்கிறது; ஆனாலும் கடந்த 2014க்குப் பின்பு, மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்டம் வந்தபின்பே, இந்தப் பணிகள் வேகம் பெற்றன. இத்தனை ஆண்டுகளில், சில குறிப்பிடத்தக்க அரும்பணிகளையும் நாங்கள் செய்து முடித்திருக்கிறோம்.
குப்பைத்தொட்டிக்கு 'குட் பை'
சில ஆண்டுகளுக்கு முன் வரையிலும், கோவையில் உள்ள அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முன்பாக, சில குப்பைத் தொட்டிகள் இருப்பதையும், அதில் குப்பைகள் நிறைந்து வழிவதையும், அதைச் சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் குழுமியிருப்பதையும் பார்த்திருக்க முடியும். இப்போது நகரின் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில், இந்த காட்சியை மாற்றியிருக்கிறோம்.
கோவையில், 500 அடுக்குமாடிக் குடியிருப்புகளில், 15 ஆயிரம் வீடுகளில் இருந்து குப்பைகளைச் சேகரித்து, தரம் பிரித்து, உரம் தயாரிக்கவும், மறுசுழற்சிக்கும் அனுப்பி வைக்கிறோம். எந்த குப்பையும் தொட்டிக்கு வருவதில்லை. சில நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியுதவியுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்.
இதில் 'ராக்' அமைப்பின் சாதனையாக நாங்கள் கருதுவது, சமையலறைக் கழிவுகளை, மதிப்புள்ள பொருளாக மாற்றி அழிப்பது தான். இத்தகைய பணிகளில், இந்துார் நகரம் தான், தேசத்துக்கே முன் மாதிரியாக பல பணிகளைச் செய்து வருகிறது. அங்கு, சமையலறைக் கழிவுகளை வைத்து, 'பயோ காஸ்' தயாரித்து, துாய்மைப்பணிக்கான சி.என்.ஜி., வாகனங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
அந்தளவுக்கு இங்கு பணிகளை மேற்கொள்ள இன்னும் பல வழிகளிலான முயற்சிகளும், பல தரப்பு ஆதரவும் தேவைப்படுகிறது. சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றுவதிலும் பல சவால்கள் இருக்கின்றன. குறைந்தபட்சம் அதற்கு 45 நாட்கள் தேவைப்படும்; ஒவ்வொரு நாளும் அதில் ஈரம் படியாமல் புரட்டிப்போட்டு, காற்றுப்பட வைத்து, பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
சமையலறை கழிவு ஒரு சவால்!
உரமாக மாற்றினாலும், அதை எவ்வளவு விவசாயிகள் வாங்குவார்கள் என்ற கேள்வி உள்ளது. அதைக் கொண்டு போய் விவசாயிகளிடம் கொடுக்க, போக்குவரத்துக்கும் செலவிட வேண்டியிருக்கும். ஆக,சமையல் கலை போன்றே, சமையல் கழிவுகளை அழிப்பதும் ஒரு கலைதான். அதற்காகமுயன்று ஒரு புதிய மாற்று யுக்தியைக் கண்டறிந்து, அதில் நல் விளைவையும் நாங்கள் கண்டுள்ளோம்.
இந்த முறையில், சமையலறைக் கழிவுகளைச் சேகரித்து, சிறுசிறு துண்டுகளிலான அளவில் தரம் பிரிக்கிறோம்; அதன்பின் கரும்பைப் பிழிவது போல, அந்த கழிவுகளில் உள்ள ஈரத்தை இயந்திரத்தால் பிழிந்து எடுத்து விடுகிறோம்; அதில் கிடைக்கும் தண்ணீரில் நிறைய சத்துக்கள் இருப்பதால், அதை உயிர் உரமாக மாற்ற அனுப்பி விடுகிறோம்.
சக்கையான கழிவுகளை எரிபொருள் கட்டியாக (Briquettes) மாற்றுகிறோம். இதற்காகவே, 'பாஷ்' நிறுவனத்தின் சமூகப்பங்களிப்பு நிதியில் இயந்திரங்களை தயாரித்துள்ளோம்.
இதில் உருவாக்கப்படும் 'பிரிக்கேட்', விறகு மற்றும் நிலக்கரி போன்றவற்றுக்கு மாற்றான புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகப் பயன்படுகிறது.
இந்த முறையில், ஒரு டன் சமையலறைக் கழிவில் 500 லிட்டர் வரை, திரவ வடிவ உயிர் உரம் தயாரிப்பதற்கான நீர் கிடைக்கிறது. பத்து சதவீதம், 'பிரிக்கேட்' ஆக மாற்றப்படுகிறது.
மொத்தம் 10 டன் சமையலறைக் கழிவிலிருந்து ஒரு டன் 'பிரிக்கேட்' தயாரிக்க முடியும். இது விறகைப் போலவே, அதிக நேரம் எரியக்கூடியது; நிலக்கரியில் பாதியளவு ஆற்றல் கொண்டது.
மரங்களை வெட்டக்கூடாது; புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கக்கூடாது போன்ற சூழலியல் வாதங்களுக்கு, இது வலுச் சேர்க்கிறது என்பதில் எங்களுக்குப் பெருமிதம்.
இந்த எரிபொருளுக்கு விற்பனைச் சந்தையும் நன்றாக இருக்கிறது. விறகு, நிலக்கரி பயன்படுத்தப்படும் திருப்பூர் சாயத் தொழிற் சாலைகள், நீலகிரி தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் பேப்பர் மில்கள் உள்ளிட்ட பலவிதமான தொழிற்கூடங்களிலும், இந்த 'பிரிக்கேட்'களை மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம். ஆயிரம் டன் கொடுத்தாலும், வாங்க சில நிறுவனங்களும் தயாராகவுள்ளன.
தினமும் 30 டன்கழிவு சேகரிப்பு
கோவை நகரில், 500 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் கல்யாண மண்டபங்களிலிருந்து, 'ராக்' அமைப்பால் தினமும் 30 டன் சமையலறைக் கழிவு சேகரிக்கப்பட்டு, மூன்று இயந்திரங்களின் உதவியுடன், 'பிரிக்கேட்' தயாரிக்கப்படுகிறது.
இதற்காக, மாநகராட்சி நிர்வாகம் ஒண்டிப்புதுாரில் இடமும், இயந்திரங்களை இயக்குவதற்குத் தேவையான மின்சாரமும் வழங்கியுள்ளது.
சேகரிக்கப்படும் கழிவுகளை, சில மணி நேரங்களில் இந்த மையத்திற்குக் கொண்டு வந்து, ஈரத்தை எடுத்து விடுவதால், கழிவுகள் அழுகுவதற்கு வாய்ப்பில்லை.
அதனால் துர்நாற்றம் ஏற்படுவதில்லை. மாதிரித் திட்டமாக இது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியின் மாபெரும் ஒத்துழைப்பே, இதற்குக் காரணம். இப்போது ஊரகப் பகுதிகளிலும் இதை விரிவுபடுத்தி வருகிறோம்.
நகரில் மேலும் பல இடங்களில் இதேபோன்ற கழிவு மேலாண்மை மையங்களை உருவாக்கி, சமையலறைக் கழிவுகள் அனைத்தையுமே மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றலாம்.
இளைஞர்களுக்கு இது ஒரு வருவாய் வாய்ப்பாக அமையும்; திடக்கழிவு பிரச்னைக்கு தீர்வாகவும் இருக்கும். சூழல், நீர்நிலைகள் காக்கப்படும்; காற்று மாசும் தடுக்கப்படும்; எதிர்கால சந்ததிக்கு இயற்கையும், ஆரோக்கியமும் மீட்கப்படும்!
இப்போதைக்கு மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள் தான்... குப்பைகள் உருவாக்குவதைக் குறைக்க வேண்டும்; குப்பையைத் தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்!
