ADDED : ஆக 24, 2025 04:09 AM

சென்னை: ''கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம்,'' என, நடிகர் கமல் பேசினார்.
தி.மு.க., மாணவர் அணி சார்பில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், 'எங்கள் கல்வி, எங்கள் உரிமை' என்ற தலைப்பில், மாநில கல்விக் கொள்கை உரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது:
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம். மத்திய அரசு, கல்வியில் கூட்டாட்சி வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், மாநில அரசுக்குதான் மக்களின் மனநிலையும், கள யதார்த்தமும் தெரியும்.
மொழி திணிப்பு கூடாது. மொழி என்பது மட்டுமே கல்வி கிடையாது. தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிக் கொள்கையை தெளிவாக வலியுறுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை, தாய் மொழி கல்வி, ஆங்கிலம் மற்றும் இன்னும் பிற இந்திய மொழிகள் என, குறிப்பிடப்படுகிறது. பிற மொழிகள் என்றால் என்ன?
நம் மாணவர்கள் இரு மொழிகளில் கற்று தேர்ந்தவர்கள். நடைமுறை தேவைக்கு ஏற்ப, மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளலாம். அதற்கு சிறந்த உதாரணம் நான்தான். நான் பள்ளிக்கு வெளியே இருந்து கூடுதலாக, 6 மொழிகளை கற்றுக் கொண்டேன். எனக்கு தேவைப்படும்போது, தேவையான மொழிகளை, நான் கற்றுக் கொண்டேன். ஆனால், என் தாய் மொழி தமிழ்தான்.
இன்றைய தொழில்நுட்ப உலகில், நிகழ் நேர மொழிபெயர்ப்பு சாதனங்கள் அதிகம் வந்து விட்டன. எனவே, மொழி திணிப்பு என்பது தேவையற்றது. இவ்வாறு அவர் பேசினார்.