கூடங்குளம் அணு உலைகள் விரைவில் முழு செயல்பாட்டுக்கு வரும்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி
கூடங்குளம் அணு உலைகள் விரைவில் முழு செயல்பாட்டுக்கு வரும்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி
ADDED : டிச 06, 2025 05:42 AM

புதுடில்லி: டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ''இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை, 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
''கூ டங்குளத்தில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் கட்டும் முதன்மை திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். ஆறு அணு உலைகளில் ஏற்கனவே இரண்டு எரிசக்தி கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள நான்கு உலைகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,'' என் றார்.
வர்த்தக ஒப்பந்தம்:
இரு நாட்கள் அரசு முறைப் பயணமாக, நம் நாட்டுக்கு வந்த ரஷ்ய அதிபர் புடினை, தலைநகர் டில்லியில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, தன் இல்லத்தில் அவருக்கு விருந்தளித்தார். அப்போது, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட, 'பகவத் கீதை' புத்தகத்தை புடினுக்கு மோடி பரிசளித்தார்.
இந்நிலையில் நேற்று, ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்தார். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத் இல்லத்தில், 23வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி மற்றும் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், சந்தை அணுகலை எளிதாக்கவும், பொருளாதார வேகத்தை அதிகரிக்கவும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும் விவாதித்தனர். தொடர்ந்து, வர்த்தகம், சுகாதாரம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி பேசியதாவது: வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்கு ம் நோக்கில், 2030 பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளோம். இரு நாடுகளின் தொழில்களுக்கு இடையே இணை உற்பத்தி, இணை கண்டுபிடிப்புகளை வலுப்படுத்த, இந்தியா - -ரஷ்யா வர்த்தக மன்றத்தில், இந்தியா தீவிரமாக பங்கேற்கும்.
சர்வதேச வடக்கு- - தெற்கு போக்குவரத்து வழித்தடம், வடக்கு கடல் வழித்தடம், சென்னை - விளாடிவோஸ்டாக் கடல் இணைப்பு போன்ற முக்கிய இணைப்பு வழித்தடங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவை வினியோகத் தொடர்களை மறுவடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும்.
ரூ.9 லட்சம் கோடி:
கூட்டணியின் முக்கிய பகுதியாக, கப்பல் கட்டுமானம் இருக்கும். இது, 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு நேரடியாக உதவுவதுடன், உள்நாட்டில் வேலைகள் மற்றும் புதிய திறன்களை உருவாக்கும். அணுசக்தி ஒத்துழைப்பு, அரியவகை கனிமங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு தொடரும். உக்ரைன் விவகாரத்தில், இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; அமைதியின் பக்கம் நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: ரஷ்யா - இந்தியா கூட்டணியின் முக்கிய துாண்களாக, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளன. கூட்டு திட்டங்களுக்கு ரஷ்ய கரன்சியான, 'ரூபிள்' பயன்படுத்தப்படுவது நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது. எரிவாயு, எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றின் நம்பகமான சப்ளையராக, ரஷ்யா எப்போதும் இருக்கும். அவற்றை தொடர்ந்து ஏற்றுமதி செய்யவும் தயாராக உள்ளோம்.
கூடங்குளத்தில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் முதன்மை திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அங்கு, ஆறு அணு உலைகளில் ஏற்கனவே இரண்டு எரிசக்தி வலை யமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு உலைகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. இந்த அணுமின் நிலையத்தை முழு மின் உற்பத்திக்கு கொண்டு வருவது, இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இது, இந்திய நுகர்வோர் மலிவான மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்த உதவும்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், கடந்த ஆண்டு, 12 சதவீதம் அதிகரித்து, 5.76 லட்சம் கோடி ரூபாய் எட்டியுள்ளது. இதை, 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நி ர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, 2026ல் ரஷ்யாவில் நடக்கும் 24வது இந்தியா - ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டுக்கு வரும்படி, பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்தார்.

