ஏரியில் மணல் அள்ளிய விவகாரம்: தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு மீது வழக்கு
ஏரியில் மணல் அள்ளிய விவகாரம்: தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு மீது வழக்கு
ADDED : செப் 28, 2026 04:45 AM

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலப்பாம்பாடி ஏரியில், சட்டவிரோதமாக மணல் எடு த்து, அரசுக்கு, 8.22 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் புகாரில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு, 75, அவரது மகன் குமரன், 48 மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த, 2025 டிசம்பர், 14ல், திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி என்ற கிராமத்தில், 124 ஏக்கரில், தி.மு.க.,வின் வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த நிலம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுவின் மகனும், அருணை பொறியியல் கல்லுாரி துணை தலைவருமான குமரன்,48 என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
தி.மு.க., மாநாட்டிற்கான ஏற்பாடுகளை வேலு செய்தார். மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, மலப்பாம்பாடி ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அறப்போர் இயக்க நிர்வாகிகள், சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
மலப்பாம்பாடி ஏரி, 70.65 ஏக்கர் பரப்பளவு உடையது. வேலுவின் அரசியல் செல்வாக்கு காரணமாக, இந்த ஏரியில் இருந்து, சட்டவிரோதமாக, 12 ஏக்கர் பரப்பளவில், 23 அடி ஆழம் வரை மண் அள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு, 8.22 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலுவின் மகன் குமரன், 2025 அக்., 31 மற்றும் நவ., 27ம் தேதிகளில், பள்ளியம்பட்டு ஏரியில் இருந்து, களிமண், வண்டல் மண் அள்ள, இணையவழியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், குமரனின் நிலத்திற்கும், இந்த ஏரிக்கும், 750 மீட்டர் தொலைவு இருப்பதால், நிலத்திற்கு அருகே உள்ள மலப்பாம்பாடி ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மண் அள்ளி உள்ளனர்.
நிலத்தை சமன்படுத்தவும், வேலு மற்றும் குமரன் ஆகியோரின் குடும்ப சொத்துக்கான அணுகு சாலையை விரிவுப்படுத்தவும், இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, வேலு, குமரன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தனி நபர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலு மீது ஏற்கனவே, அவர் பதவி வகித்த நெடுஞ்சாலை துறையில், 3.23 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தி.மு.க., சட்டசபை கொறடாவாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத்தர, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், தி.மு.க.,வின் செய்தி தொடர்பு துறை துணைத்தலைவர் அரசகுமார், 58 உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகேஷ், அவரது உறவினர் வாளாடி கார்த்திக், உதவியாளர் அருண் பிரகாஷ் ஆகியோரின் வீடுகள் உட்பட ஒன்பது இடங்களில் சமீபத்தில் போலீசார் சோதனை நடத்தி, ஊழல் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.
அவற்றை ஆய்வு செய்து, மகேஷ், வாளாடி கார்த்திக், அருண் பிரகாஷ் ஆகியோரிடம், பல மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., பிரமுகருமான முத்துகுமார், 48 என்பவரின் உறவினர்களான கள்ளக்குறிச்சி மாவட்டம், டி.குண்ணத்துாரில் உள்ள சரவணன், ரமேஷ் ஆகியோரின் வீடுகளில், கடந்த இரண்டு நாட்களாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
அதேபோல, கள்ளக்குறிச்சியில் உள்ள கோகுலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
இச்சோதனையில், பண மோசடி தொடர்பாக பயன்படுத்தப்பட்ட, 30க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். தலைமறைவாக உள்ள முத்துகுமாரை தனிப்படை அமைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.
