நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! நீலகிரியில் அதிகரிக்கும் விதி மீறல்களால் ஆபத்து
நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! நீலகிரியில் அதிகரிக்கும் விதி மீறல்களால் ஆபத்து
ADDED : ஆக 01, 2024 12:22 AM

குன்னுார் : 'கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு போன்று, நீலகிரியிலும் பேரிடர் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது,' என, வல்லு னர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
'ஆசியாவின் சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமான, மேற்கு தொடர்ச்சி மலையை, பாதுகாக்காவிட்டால் பல இடங்களில் பெரியளவிலான நிலச்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது,' என, மாதவ் காட்கில் தலைமையிலான சுற்றுச்சூழல் நிபுணர் குழு, 2013ல் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
இதன்பின், இந்த அறிக்கைக்கு கேரள, தமிழம் உட்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல மாநில அரசுகளும் மலை பகுதிகளை பாதுகாக்க போதிய அக்கறை காட்டவில்லை. இயற்கையை அழிக்கும் விதிமீறல்கள் மட்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
வயநாட்டில் துயர சம்பவம்
இந்நிலையில், கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் உள்ள மலைகளில் மண் அடுக்கு குறித்த புரிதல் இல்லாமல், அரசும், மக்களும் இருந்ததால், நீர் வழித்தடங்களில் உள்ள, பல நுாறு கட்டடங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் மலை பகுதியில் இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐகோர்ட் உத்தரவு மீறல்
நீலகிரியில் கொண்டு வரப்பட்ட 'மாஸ்டர் பிளான்' சட்டம்; ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, மாவட்டம் முழுவதும் மலையை கரைத்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவது; மண்சரிவுகளை தடுத்து நிறுத்தும் மரங்களை வெட்டுவது; பாறைகள் உடைப்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு, கட்டட விதிமுறைகளில் மாவட்ட நிர்வாகம் சில தளர்வு செய்ததால், மலை பகுதிகள் அழிக்கப்பட்டு கட்டட காடுகள் அதிகரித்து வருகின்றன. சாதாரண மக்களுக்கு கட்டடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், பணம் படைத்தவர்களின் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி அளிக்கின்றனர்.
மலை பாதையில் அபாயம்
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை தேசிய நெடுஞ்சாலையோரம் விரிவாக்க பணிகள் நடந்த நிலையில், விவசாய பணிக்கு என்ற போர்வையில் பொக்லைன் பயன்படுத்தி மலைகள் குடைந்து மண் அகற்ற ஆளும் கட்சியின் நிர்வாகிகளின் பரிந்துரை பேரில், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், குரும்பாடி, டபுள் ரோடு, காந்திபுரம், வெலிங்டன், காணிக்கராஜ் நகர் உட்பட பல இடங்களிலும் மலைகள் குடைந்து சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை தடுக்க கோரி, முன்னாள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்க சென்றவர்களிடம், 'பாறை உடைத்தாலும், பொக்லைன் பயன்படுத்தினாலும் உங்களுக்கு என்ன,' என, சில உயர் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக பேசி உள்ளனர். தற்போது, குன்னுார் ராஜாஜி நகர், புரூக்லேண்ட் அரசு மருத்துவமனை மாடல் ஹவுஸ், மேல் கடை வீதி மற்றும் எடப்பள்ளி, ஜெகதளா, உலிக்கல், மேலூர், அதிகரட்டி, பேரட்டி, வெலிங்டன் உள்ளிட்ட பல இடங்களிலும், ஆற்றோரப் பகுதிகளிலும் கட்டடங்கள் கட்ட மண் தோண்டப்பட்டு வருகிறது. இத்தகைய கட்டட பணிகளின் போது, சில இடங்களில் ஏற்பட்ட பாதிப்பில் பலர் பலியாகி உள்ளனர்.
கடந்த கால பலி சம்பவங்கள்
'கடந்த, 2014 மே 2ல், குன்னுார் ஸ்டான்லி பார்க் அருகே இருவர்; 2016ம் ஆண்டு டிச.. 22ம் தேதி குன்னுார் டிரம்ளா எஸ்டேட்டில் நான்கு பேர்; 2017 ஜூன் 10ம் தேதி குன்னுார், சி.எம்.எஸ்., பகுதியில் ஒருவர்; கடந்த பிப், 6ம் தேதி ஊட்டி லவ்டேல் அருகே 6 பேர்; ஊட்டி பாப்சா லைனல், 2024 மார்ச் 13ம் தேதி இருவர்; கடந்த, 6ம் தேதி வெலிங்டன் ராணுவ பகுதியில் ஒருவர்,' என, மண் சரிவுகளில் புதைந்து தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இத்தகைய நிலை தொடராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.