கேரள உள்ளாட்சி தேர்தலில் உருண்டு விழுந்த பினராயி அரசு
கேரள உள்ளாட்சி தேர்தலில் உருண்டு விழுந்த பினராயி அரசு
UPDATED : டிச 14, 2025 06:30 AM
ADDED : டிச 14, 2025 02:10 AM

திருவனந்தபுரம் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
பல்வேறு வியூகம் அதே நேரத்தில் 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 50 வார்டு களை கைப்பற்றி பா.ஜ., அசத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மற்றும் கேரளாவில், அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இதனால், சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களை கவர, பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் வரிசையாக அறிவித்திருந்தார்.
அதே போல், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக களமிறங்கியது.
லோக்சபா தேர்தலின்போது திருச்சூர் தொகுதியில் மட்டும் வெற்றி கொடி நாட்டிய பா.ஜ.,வும் உள்ளாட்சித் தேர்தலை இம்முறை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது.
எடுபடவில்லை பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டதால், ஆளும் தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது.
ஆனால், ஆட்சி கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் மக்களிடையே எடுபடவில்லை. இதுவே, இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என கணிக்கப்படுவதால், ஆளும் இடதுசாரி ஜனநாயக அரசு கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

