'இட ஒதுக்கீடு நிறைவேற்றாதோரை பொறுப்பாக்க சட்டம் தேவை'
'இட ஒதுக்கீடு நிறைவேற்றாதோரை பொறுப்பாக்க சட்டம் தேவை'
ADDED : டிச 10, 2024 12:07 AM

'அரசியலமைப்பு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அமைப்புகளை பொறுப்பாக்கும் வகையில் உரிய சட்டம் இயற்ற வேண்டும்' என, அனைத்திந்திய ஓ.பி.சி., மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
டில்லியில் நேற்று நடந்த சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,யான பி.வில்சன் கூறியதாவது:
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீதம், எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம், எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை பல கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் முறையாக செயல்படுத்துவதில்லை. இந்தப் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை நிரப்பாததை, வன்கொடுமையாகவே பார்க்க வேண்டும்.மேலும், இந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களை அதற்கு பொறுப்பாக்க வேண்டும். இதற்காக உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை மையம் ஆகியவற்றில் ஆசிரியர் பணியிடங்களில், இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இது தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்து, பணி நியமனங்கள் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்.,களில் 9-0 சதவீத பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் உள்ள இந்த கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீட்டின்படி உரிய இடங்கள் நிரப்பப்படுவதில்லை. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -