விடுதலை போராட்ட தியாகிகளுக்காக 20 ஆண்டுகளாக வாதாடும் வழக்கறிஞர்
விடுதலை போராட்ட தியாகிகளுக்காக 20 ஆண்டுகளாக வாதாடும் வழக்கறிஞர்
ADDED : பிப் 12, 2026 05:00 AM

சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு மறுக்கப்படும் ஓய்வூதியம் மற்றும் நலத் திட்டங்களை, தன் சட்டத் திறமையால் போராடி பெற்று தரும், 50 வயதை கடந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி கவனம் பெற்று வருகிறார்.
நாட்டின் சுதந்திர போராட்டத்துக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இது தவிர, தனி மனிதனராக ஒருசிலரும் தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். இதில் தங்களின் பங்களிப்பு குறித்து, மற்றவர்களிடம் விளம்பரப்படுத்தாமல் இருப்பவர்களும் உண்டு.
அந்த வரிசையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.நந்தகோபாலன், 52, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, தன் சட்டப் போராட்டத்தின் வாயிலாக, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு மறுக்கப்படும் ஓய்வூதியம் மற்றும் நலத் திட்டங்களை பெற்று தந்து வருகிறார்; அதன் வாயிலாக, சட்டத் துறையில் தனி கவனத்தை பெற்று வருகிறார்.
அவர் அளித்த பேட்டி: வழக்கறிஞர் தொழிலில், கடந்த 2001ம் ஆண்டு நுழைந்தேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, என் வழக்கறிஞர் தொழிலில், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு, மறுக்கப்படும் ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளேன்.
இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில், சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்றவற்றை பெற்று தந்துள்ளேன். என் பயணம் இன்னும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

