sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்! முதல்வருக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சவால்

/

ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்! முதல்வருக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சவால்

ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்! முதல்வருக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சவால்

ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்! முதல்வருக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சவால்

32


ADDED : ஏப் 14, 2025 06:05 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:05 AM

32


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் செல்வாக்கும், ஆதரவும் பெருகியிருப்பதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின், அது உண்மை என்றால், இப்போதே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார். அவர் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

தமிழக பா.ஜ.,வுக்கு 'பூத் கமிட்டி' அமைக்கும் விஷயத்தில், பெரும் தொய்வு இருப்பதாக சொல்லப்படுகிறதே?



ஏற்கனவே முழு அளவில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி பார்த்து, பூத் கமிட்டி உறுப்பினர்களை முழு வேகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட வைக்க, நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளேன். மற்றபடி, பூத் கமிட்டி விஷயத்தில் எந்த தொய்வும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக அண்ணாமலை, தி.மு.க., எதிர்ப்பை கடுமையாக முன்னெடுத்தார். உங்கள் பாணி வேறானதா?



எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தான் தி.மு.க.,வை, தமிழகத்தின் 'தீயசக்தி' என்று விமர்சித்து முத்திரை குத்தினர். அந்த அதிரடியான பாணியை கையில் எடுத்து அண்ணாமலை செயல்பட்டார். தற்போதைய தி.மு.க. அரசு, தன் இறுதிக் காலத்தில் உள்ளது. அதே பாணியில் தான் நானும் செயல்படுவேன்.

நான்கு ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாக தி.மு.க., தரப்பினர் சொல்கின்றனரே?



தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்த விஷயத்தையும் இதுவரை செய்யவில்லை. 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட எத்தனையோ திட்டங்கள் பேச்சளவில் மட்டுமே உள்ளன. தி.மு.க., ஆட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

மகளிருக்கு உதவும் திட்டங்களை கொண்டு வந்ததாக அவர்களே பெருமை பேசுகின்றனர். மகளிருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை தருவதாக சொன்ன திட்டத்தைக்கூட, மூன்று ஆண்டுகள் கழித்து தான் செயல்படுத்தினர்.

அதிலும், 'தகுதியுள்ள குடும்பத் தலைவி'யருக்கு மட்டுமே உதவித்தொகை என்று அறிவித்தனர். அப்படியென்றால், மற்ற பெண்கள் எல்லாம் தகுதியுள்ள குடும்பத் தலைவியர் இல்லையா? இதை நான் கேட்கவில்லை. தமிழகத்து பெண்கள் கேட்கின்றனர்.

அது மட்டுமல்ல, வேளாண்மை பட்ஜெட்டில் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நான்கு கோடி பேருக்கு மேல் விவசாயம் செய்கின்றனர். ஆனால், ஆங்காங்கே 100, 200 பேருக்கு மட்டும் உதவிகள் அறிவித்துவிட்டு, மற்றவர்களை ஏமாற்றியுள்ளனர்.

மின்சார கட்டண உயர்வு ஆளைக் கொல்கிறது. யாராலுமே செலுத்த முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மின்சாரம் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்பதால், வேறு வழியின்றி கட்டணம் செலுத்துகின்றனர். அதேபோல் சொத்து வரி 300 மடங்கு கூடி இருக்கிறது. தொழில் நிறுவனத்துக்கு என்ன வருமானம் இருக்கிறதோ, அதற்கு ஈடாக சொத்து வரியை செலுத்தச் சொல்கின்றனர்.

இப்படிபட்ட சூழலில், தமிழகத்தில் யாராலும் தொழில் நடத்த முடியாது. எப்படி பொறியியல் கல்லுாரிகளை நடத்த முடியாமல் விற்றுவிட்டு போகின்றனரோ, அதேபோல், தொழிற்சாலைகளையும் விற்றுவிட்டோ, மூடிவிட்டோ ஓடும் நிலை தான் உள்ளது.

மத்திய அரசு திட்டங்களைக்கூட தங்கள் திட்டமாக தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக பா.ஜ., தொடர்ந்து விமர்சிக்கிறதே?



உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். பிரதமரின், 'கரீப் கல்யாண் யோஜனா' திட்டத்தின் வாயிலாகத் தான் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வந்து சேர்கின்றன. சகாய விலையிலும், இலவசமாகவும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுவதற்கு, பிரதமரின் இந்த திட்டம் தான் காரணம். ஆனால், இந்த திட்டத்தை, தங்கள் திட்டம் போல் காட்டி, மக்களை ஏமாற்றி வருகிறது தி.மு.க., அரசு.

மக்களும், இது பிரதமரின் திட்டம் என்றே தெரியாமல் உள்ளனர். உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியையும் தமிழக பா.ஜ., மேற்கொள்ளும்.

'ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி' என தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கிறீர்களே?



கடவுள் இல்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. கடவுள் உண்டு என்று சொல்பவர்களை அசிங்கப்படுத்துவதோடு கேவலப்படுத்துகின்றனர்; சனாதன தர்மத்துக்கு எதிராகவும் பேசி செயல்படுகின்றனர். அப்படிபட்ட ஆட்சியை, தமிழக மக்கள் மட்டுமல்ல; இறைவனும் விட்டுவைக்க மாட்டான்.

'அ.தி.மு.க.,வை நிர்ப்பந்தப்படுத்தி தான் கூட்டணிக்குள் பா.ஜ., கொண்டு வந்திருக்கிறது' என அக்கட்சிக்குள்ளேயே பொருமல் இருக்கிறதே?



அப்படி எந்தப் பொருமலும் இல்லை. தி.மு.க., கூட்டணிக்குள் இருப்போர் தான், பா.ஜ., கூட்டணி குறித்து பொருமுகின்றனர். எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் தான் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இணைந்திருக்கிறது.

இரு தரப்பும் இணைந்ததை கண்டு அச்சப்படும் தி.மு.க., தான், திரைமறைவில் இப்படிபட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறது.

பா.ஜ.,வுடன் கூட்டணியாக அ.தி.மு.க., மீண்டும் இணைந்த நாளில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்டுமே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அது, பா.ஜ., நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு. அதனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் பேச முடியவில்லை. விரைவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, கூட்டணி குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.

ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசிய பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கம், இன்னும் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் வருத்தமாக உள்ளதா?



சகோதரர் அண்ணாமலை தன் விமர்சனத்தில் யாரையும் மோசமாக குறிப்பிடவில்லை. ஆனால், அவருடைய கருத்தை தவறாக உள்வாங்கி, பிரசுரித்த பத்திரிகையாளர்களின் எண்ணம் வெற்றி அடைந்துவிட்டது. அதனாலேயே அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் நெருடல் ஏற்பட்டு விட்டது. இரு தரப்புக்கும் இருந்த லேசான நெருடல், இப்போது முற்றிலுமாக நீங்கிவிட்டது.

உள்துறை அமைச்சரோடு அண்ணாமலையும், பழனிசாமியின் இல்லத்தில் உணவு அருந்தினார். அப்போதே, இருதரப்புக்கும் இடையே இருந்த கசப்புகள் மறைந்துவிட்டன. சந்தித்து பேசினால், எந்தப் பிரச்னையும் சுலபமாக தீர்ந்துவிடும் என்று சொல்வர். அந்த வகையில், பழனிசாமி வீட்டுக்கு அண்ணாமலை வந்ததே, பிரச்னைக்கான முற்றுப்புள்ளி தான். இரு கட்சித் தொண்டர்களுக்கும் அந்தக் கசப்பே இல்லை.

'பா.ஜ., ஒரு தீண்டத்தகாத கட்சி; அதோடு அ.தி.மு.க., சேர்ந்ததால், படுகுழியில் விழுந்துவிட்டது' என்று தி.மு.க., விமர்சிக்கிறதே?



தீண்டத்தகாத கட்சி, பண்டாரம், பரதேசி கட்சி என்று சொன்னவர் கருணாநிதி. ஆனால், அவரே 1999ல் மீண்டும் பண்டாரம், பரதேசி காலில் வந்து விழுந்தார்; லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்தார். வாஜ்பாய் அமைச்சரவையில், தி.மு.க.,வினர் ஐந்து ஆண்டு காலம் பதவி சுகம் அனுபவித்தனர். தீண்டத்தகாத கட்சி என்று விமர்சனம் செய்த கருணாநிதி, பதவி என்றதும் பா.ஜ.,வுடனேயே கூட்டணி அமைத்த பின், அவருடைய வாதம் பொய் என்பது நிரூபணமானது. இதில், படுகுழியெல்லாம் எங்கிருந்து வந்தது?

'ஊழலும் ஊழலும் கைகோர்த்துள்ளது' என அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து தி.மு.க., விமர்சிக்கிறதே?



யார் முதலில் ஊழல் செய்தனர்? கருணாநிதி காலத்தில் தான் அரிசி பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல், கோதுமை பேர ஊழல் உள்ளிட்ட எண்ணற்ற ஊழல்களின் ஊற்றுக்கண்ணே தி.மு.க., தான். அப்போது நடந்த ஊழல்களை தொகுத்து, பிரதமரான இந்திராவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர்., அதன் அடிப்படையில் போடப்பட்டது தான் சர்க்காரியா கமிஷன்.

அந்த கமிஷன் விசாரித்து, ஊழல் நடந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்தியது. இப்படி ஊழல் நிரூபிக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க., ஆட்சி தான். ஊழலைப் பற்றி பேச, தி.மு.க.,வுக்கு எந்த அருகதையும் கிடையாது.

உங்களை நம்பி வந்தவர்கள் பன்னீர்செல்வமும், தினகரனும். ஆனால், அவர்களை ஏற்க மறுக்கிறார் பழனிசாமி. இந்தச் சூழ்நிலையில் அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?



ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. இப்போதைக்கு மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதே எல்லாருடைய எண்ணமும். அதற்காகவே ஒத்த கருத்துள்ள கட்சிகள், பா.ஜ.,வுடன் கூட்டணியாக இணைந்து வருகின்றன. கடைசியாக பழனிசாமியும், அதே கருத்தோடு எங்களோடு இணைந்திருக்கிறார். எல்லாரிடமும் கலந்து பேசி, இதற்கும் நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும்.

பா.ம.க.,வில் மகன், தந்தை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதே. கூட்டணி கட்சியாக பிரச்னையை தீர்க்க முயல்வீர்களா?



அது உட்கட்சி பிரச்னை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். எங்களால் யாருக்கும் எப்போதும் எந்தப் பிரச்னையும் இருக்காது. தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தில் எல்லாரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் என் எண்ணம், வேண்டுகோள். அதனால், முரண்பட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைய வேண்டும்.

இப்படித்தான், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்காக ராஜாஜி, முரண்பட்டு இருந்தவர்களோடும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அந்த வகையில், தி.மு.க., ஆட்சியை அகற்ற முரண்பாடுகள் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எல்லாரும் ஒன்றுசேர வேண்டும்.

அப்படியென்றால், சீமான், நடிகர் விஜய், பிரேமலதா உள்ளிட்டோரையும் பா.ஜ., கூட்டணியில் இணைத்துக் கொள்வீர்களா?



தனிமரம் தோப்பாகாது. ஒரு கை தட்டினால் ஓசை வராது. அதனால், எல்லாரையும் இணைத்து, தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான அனைத்து வேலைகளையும் தமிழக பா.ஜ., முன்னின்று செய்கிறது. அந்த வகையில், அவர்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்; தவறில்லை.

தி.மு.க., ஆட்சிக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருவதாக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி சொல்கிறாரே?



ஒரு ஆட்சி மீதான அதிருப்தி என்பது 8 சதவீதம் தான் இருக்கும். ஆனால், நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு, 25 சதவீதத்துக்கும் மேல் அதிருப்தி இருக்கிறது. களத்துக்குச் சென்று நீங்கள் இதை விசாரித்துக் கொள்ளலாம். ஆதரவு பெருகியிருப்பதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன்.

இப்போதே ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தலை சந்திக்கட்டும். தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் சொல்வதே உண்மையென ஏற்கலாம்.

நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை, மும்மொழி, வக்ப் திருத்த சட்டம் உள்ளிட்ட கொள்கை அடிப்படையிலான விஷயங்களில், பா.ஜ.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது அ.தி.மு.க., சமீபத்தில் வக்ப் திருத்த சட்டம் பார்லி.,யில் கொண்டு வந்தபோது, அதற்கு எதிராக ஓட்டளித்தனர் அ.தி.மு.க.,வினர். இது நடந்த ஒரு வார காலத்துக்குள்ளேயே, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி என்றால் ஏற்க முடியவில்லையே என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே?



இதற்குத் தான் உள்துறை அமைச்சர் தெளிவாக பதில் அளித்திருக்கிறார். குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படையில் செயல்பட இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டு கூட்டணி அமைத்திருக்கிறோம். இதில் எந்த முரண்பாடும் இல்லை.

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என்று சொல்லப்படுகிறதே?



வெற்றுப் பிரசாரம். அதில் துளியும் உண்மையில்லை. நான் தமிழக பா.ஜ., தலைவராக தேர்வு பெற்றவுடன், என்னை அழைத்து பேசியவர்களில் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் உண்டு.

'மாமா... இப்போது தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று மனம் நெகிழ்ந்து முஸ்லிம்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ.,வினரும், சிறுபான்மையினத்தவரும் பல இடங்களிலும் தாயாய், பிள்ளையாகத்தான் பழகி வருகின்றனர்.

அதனால், சிறுபான்மையினர் ஓட்டுகள் பா.ஜ., கூட்டணிக்கு வராது என்பது பொய் பிரசாரம். ஏற்கனவே, திருநெல்வேலி தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகம் பெற்றதால் தான், நான் எம்.எல்.ஏ.,வாக ஆக்கப்பட்டேன்.

எங்கோ ஒருசில இடங்களில் பா.ஜ.,வுக்கு எதிராக சிறுபான்மையினர் இருக்கலாம். அந்த நிலைமையும் விரைவில் மாறும். எதிர்காலத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளையும் பா.ஜ., அதிகம் பெறும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us