உங்களில் ஒருவன்: ஊழல் நபர்களை ஒதுக்கி நல்லவர்களுக்கு ஓட்டளிப்போம்!
உங்களில் ஒருவன்: ஊழல் நபர்களை ஒதுக்கி நல்லவர்களுக்கு ஓட்டளிப்போம்!
ADDED : ஜன 29, 2024 05:14 AM

நடு நாடு என்று அழைக்கப்பட்ட, உண்மையான கலாசாரத்தை கொண்ட தமிழகத்தின் இதயப் பகுதியான விழுப்புரம் மண்ணிலும், உளுந்தாண்டார் கோவில் மேஷபுரீஸ்வரர் அருள் புரியும் உளுந்துார்பேட்டை மண்ணிலும், காலம் காலமாக வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லாமல், கிராமச் சூழல் மாறாமல் காத்துக் கொண்டிருக்கும் திருக்கோவிலுார் மண்ணிலும், தமிழக பா.ஜ., பாதயாத்திரை பயணம் தொடர்ந்தது.
கொதிக்கும் சூரியனை ஒதுக்கி தள்ளிவிட்டு, தாமரையின் தருநிழலில் தஞ்சமடையும் ஆவலில், விழுப்புரம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் மக்கள் திரண்டு வந்து ஆதரவளித்தது மகிழ்ச்சியை தந்தது.
ஊழல் அமைச்சர்களுக்கு எல்லாம் தனி இலாகா தந்து பாதுகாத்து, தன் உறவுகளையும், சொந்தங்களையும், சுற்றங்களையும் முன்னேற்றுவதற்கான குடும்ப ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.
குடும்ப ஆட்சிக்காக, தமிழக மக்கள் நலனையும், வளர்ச்சியையும் காவு கொடுத்துக் கொண்டிருக்கும் தற்போதைய தி.மு.க., ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும். சிறப்பான ஆட்சியை மத்தியில் தந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடியை, மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் தீர்க்கம், ஒவ்வொருவர் முகத்திலும் வெளிப்பட்டது.
மோசமான வரலாறு
சென்னை பல்லாவரம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., வீட்டில் வேலை செய்த உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் இன சகோதரிக்கு நடந்த கொடுமை, மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அந்தச் சகோதரிக்காக பா.ஜ., குரல் எழுப்பியது. இல்லையென்றால், குற்றம் இழைத்த எம்.எல்.ஏ.,வின் மகன் மற்றும் மருமகளை தமிழக போலீஸ் கைது செய்திருக்காது.
அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைத்தால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விடும் என்பதற்காக, தி.மு.க.,வினர், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என்றனர்.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. கருணாநிதி எந்த ஆண்டில் ரயில் வராத பாதையில் தலையை வைத்து படுத்தார் என்பது போன்ற, தி.மு.க.,வின் மோசமான வரலாற்றை தெரிந்து, நம் குழந்தைகள் எப்படி முன்னேற முடியும்?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும், பல்வேறு திட்டங்கள் வாயிலாக, மத்திய அரசு நிதியாக பல நுாறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலை என்றனர். ஆனால், அரசுப் பணிக்காக, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிடவில்லை. தற்போது, 30 லட்சம் பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
ஆட்சிக்கு வந்து 31 மாதங்களில், 1.55 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுத்திருக்க வேண்டும்; தி.மு.க., அரசு இதுவரை, 10,323 பேருக்கு மட்டுமே அரசு வேலை கொடுத்துள்ளது.
போதிய பிரதிநிதித்துவம்
விழுப்புரத்தில் மட்டும், 2,000த்திற்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் உள்ளனர். இங்கே செய்யப்படும் எடை குறைந்த மூக்குத்திகள், நாடு முழுதும் பிரபலம். இவர்களைப் போன்ற கைவினைக் கலைஞர்கள் பயன் பெறவே, பிரதமர் மோடி, விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்து, 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். இந்த திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாத கடன் தரப்படுகிறது.
தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு 34 சதவீதம். ஆனால், விழுப்புரத்தின் பங்கு வெறும் 2.6 சதவீதம் தான்.
தண்டனையை நோக்கி
மத்தியில் உள்ள மொத்த 76 அமைச்சர்களில், பட்டியல் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள். அதில், வெறும் மூன்று பேர் தான் பட்டியல் சமுதாயத்தினர். இதை கேட்காதவர் திருமாவளவன்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி அமைச்சர் பதவியை இழந்து, சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் விதிக்கும் தண்டனைக்கு காத்திருக்கிறார். இவர், 41.9 கோடி ரூபாய் வங்கி வைப்புத் தொகை வைத்துள்ளதாகவும், இந்தோனேஷிய நிறுவனத்தை, வெறும் 41.57 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டி உள்ளார். பின்னர் 2022ல், 100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதில், ஹவாலா வாயிலாக பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சந்தேகித்து, வழக்கு பதிந்துள்ளது.
மற்றொரு அமைச்சர் இருக்கிறார்; அவர், சாராயம் காய்ச்சுபவர் நலத்துறைக்குத் தான் அமைச்சராக இருக்க வேண்டும். வரும் லோக்சபா தேர்லில், ஊழல் நபர்களை ஒதுக்கி விட்டு, நல்லவர்களை எம்.பி.,க்களாக தேர்வு செய்வோம்.
பயணம் தொடரும்...