UPDATED : பிப் 14, 2025 12:15 PM
ADDED : பிப் 14, 2025 10:37 AM

புதுடில்லி: தோல்வி மட்டுமே இறுதி அல்ல மறு வாய்ப்பு காத்திருக்கிறது என தொழில் அதிபர் கவுதம் அதானி கூறியுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள ஒரு மாணவி ஜே.இ.இ., தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனம் வேதனையுற்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் , ' நீங்கள் என்னை அன்பாக நடத்தினீர்கள், என்னால் உங்களின் கனவை நிறைவேற்ற முடியவில்லை. மன்னிக்கவும், தங்கை உங்கள் கனவை நிறைவேற்றுவார் '. இவ்வாறு எழுதி இருந்தார்.
இது குறித்து பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானி; அவரது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
புதிய பாதை திறக்கும்
தேர்வில் வரும் தோல்வி என்பது வாழ்வை விட பெரிதல்ல. தோல்வி வந்தாலும் மற்றொரு வாய்ப்பு திறந்திருக்கும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டாம். யாரும் தங்களின் உயிரை மாய்க்க வேண்டாம். எதிர்பார்ப்பினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ஒரு மகள் தற்கொலை செய்திருப்பது கவலை அளிக்கிறது. நான் கூட படிப்பில் மிக நல்ல நிலையில் தேறியதில்லை. பல முறை தோல்விகளை தழுவி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய பாதை திறப்பதை பார்த்திருக்கிறேன். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.

