அமெரிக்காவை போன்று பிரிட்டனிலும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு சிக்கல்
அமெரிக்காவை போன்று பிரிட்டனிலும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு சிக்கல்
UPDATED : பிப் 12, 2025 04:13 AM
ADDED : பிப் 12, 2025 01:48 AM

லண்டன் : பிரிட்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நடத்தும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பணிபுரிகின்றனரா என, நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
வளர்ந்த நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் அரசு பொறுப்பேற்ற பின் இது போன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வருகிறது.
இதே பாணியை பிரிட்டன் அரசு பின்பற்ற துவங்கியுள்ளது. பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜூலையில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார். அவரும் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பதிலும், ஆவணங்கள் ஏதுமில்லாமல் தங்கி இருப்பவர்களை நாடு கடத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
ஜனவரியில் மட்டும் 828 நிறுவனங்களில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அதில் 609 பேர் பிடிபட்டனர். இந்த கைது எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் 73 சதவீதம் அதிகம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவை போல் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து, கைகளில் விலங்கு மாட்டி விமானத்தில் ஏற்றி நாடு கடத்தும் வீடியோவையும் முதன் முறையாக பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. இதை பார்த்து பிரிட்டனுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் அச்சமடைய வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்கும் சோதனையை தற்போது இந்திய நிறுவனங்களுக்கும் நீட்டித்துள்ளனர். நேற்று முன்தினம் பிரிட்டன் முழுதும் உள்ள இந்தியர்களின் உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், அழகு நிலையங்கள், கார் பழுது நீக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு உள்ளனர். இதில், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விபரம் வெளியாகவில்லை.