ADDED : ஜன 07, 2024 04:05 AM

மார்ச் இறுதி மற்றும் ஏப்ரலில் லோக்சபா தேர்தல் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் எப்போது என்றும், அது எத்தனை கட்டமாக நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. திரிணமுல் மற்றும்காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேற்றுமை உள்ளது.
மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தன் கட்சி போட்டியிடும் என்கிறார் மம்தா. இன்னொரு பக்கம், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும், அந்த மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்துள்ளது.
இதனால் காங்., மேலிடம் கடுப்பில் உள்ளது. 'இந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பாத யாத்திரைக்கு தயாராகி விட்டார் ராகுல்' என, கட்சி சீனியர் தலைவர்களே புலம்புகின்றனர்.
ஆனால் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ., தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்து வேட்பாளர் பட்டியலை தயாரித்து விட்டதாம். இந்த மாத இறுதியில் பட்டியல் வெளியாகும் என்கின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் இந்த முறையை கடைப்பிடித்து, முன்னரே வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ., தலைமை. இதனால் கட்சிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை; பிரசாரம் செய்யவும் போதிய நேரம் கிடைத்தது. எனவே, இதே திட்டத்தை லோக்சபா தேர்தலிலும் கடைப்பிடிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.