'முதல்வர் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்கப்பா; புதுச்சேரி கவர்னர் திடீர் உத்தரவு
'முதல்வர் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்கப்பா; புதுச்சேரி கவர்னர் திடீர் உத்தரவு
ADDED : மார் 07, 2025 08:17 AM

புதுச்சேரி: அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ரங்கசாமி மனம் குமுறியதை தொடர்ந்து, அவரது உத்தரவுகளை நிறைவேற்றுமாறு கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மற்ற மாநிலங்களை போன்ற அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை. நியமன விதி திருத்தம் போன்ற சிறிய விஷயங்களுக்கும் கூட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கதவை தட்டி ஒப்புதல் பெற வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், அதிகாரம் முழுதும் அதிகாரிகள் கையில் தான். இதனால், மற்ற மாநிலங்களைப் போல, ஆளும்கட்சியைச் சேர்ந்தோர் நினைத்து, மாநிலத்தில் எதையும் பெரிதாக செய்து விட முடியாது.
இந்த நிலையை, தங்களுக்கான அதிகாரமாக எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள், மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, அமைச்சரவை ஒப்புதலுடன் கோப்புகள் அனுப்பினால் கூட, அதை அதிகாரிகள் செயல்படுத்தாமல் கிடப்பில் போடுகின்றனர்; அல்லது கோப்புகளை திருப்புகின்றனர்.
இதனால், மாநில கவர்னர், முதல்வர் ஆகியோருக்கிடையே பனிப்போர் நடக்கிறது. ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த விவகாரம், சமீபத்தில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சி வாயிலாக அப்பட்டமாக வெளிப்பட்டது.
சமீபத்தில், காமராஜர் கல்வி வளாகத்தில் சுகாதார துறை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, கவர்னர் கைலாஷ்நாதன் முன்னிலையில், அதிகாரிகள் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
'அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைக்காததால், 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. முதல்வரான நான் அனுமதி கொடுத்த பின்பும், அதிகாரிகள் நிர்வாக அனுமதி கொடுப்பதில் தாமதிப்பது ஏன்? பிறகெதற்கு நான் முதல்வராக இருக்க வேண்டும்?' என கேட்டு கொந்தளித்தார் ரங்கசாமி.
இதையடுத்து, கவர்னர் கைலாஷ்நாதன், அரசு உயரதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், 'முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் தடை இன்றி உடனடியாக செயல்பாட்டுக்கு வரவேண்டும். உரிய காலத்தில் அவை செயல்படுத்தப்பட வேண்டும்.
இவை இரண்டையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். சிறப்புக்கூறு நிதி தொடர்பான கூட்டத்திலும் இந்த உத்தரவினை கவர்னர் கைலாஷ்நாதன் மீண்டும் பிறப்பித்தார்.