நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு உள்ளூர் வல்லுனர்கள்: குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?
நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு உள்ளூர் வல்லுனர்கள்: குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?
UPDATED : டிச 18, 2023 09:27 PM
ADDED : டிச 18, 2023 06:26 AM

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, குஜராத் மாநில அரசு, நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில், உள்ளூர் சார்ந்த வல்லுனர்களை பயன்படுத்தி வருகிறது. அதுபோன்று தமிழக அரசும் நிறைவேற்றுமா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, கட்டுமான திட்ட விதிகளில் மாற்றம் போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை பெருநகர் பகுதிக்கான, மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு, நில வகைபாடு விபரங்கள் மறு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.
விதிமுறை
தமிழகத்தில், 12 இடங்களில் மண்டல அளவிலான நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் கலந்தாலோசனைக்கு, பெரும்பாலும், குஜராத், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வல்லுனர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் வல்லுனர்கள், தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால், தமிழக நகரங்களின் அடிப்படை தன்மைக்கு, இந்த பரிந்துரைகள் ஏற்றவையா என்பதை பார்ப்பதில்லை.
இந்த பணியில், உள்ளூர் அளவில் நகரங்களை முழுமையாக தெரிந்தவர்களை பயன்படுத்தினால், திட்டங்களின் செயல் திறன் மேலும் அதிகரிக்கும். இதை கருத்தில் வைத்து, உள்ளூர் அளவில் உள்ள நகரமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுனர்களை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நடைமுறை சிக்கல்
இதுகுறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது:
தமிழகத்தில், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள், முழுமை திட்டங்கள் தயாரிப்பதற்கு, கலந்தாலோசனை நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு தேர்வாகும் வெளி மாநில, வெளிநாட்டு நிறுவனங்களிடம், நம் நகரங்கள் குறித்த முழுமையான புரிதல், தரவுகள் இருப்பதில்லை.
இந்த அடிப்படை சரியில்லாத நிலையில், அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, நிதி இழப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக உள்ளூர் வல்லுனர்களை பயன்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, உள்ளூர் வல்லுனர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு, 12 பேர் அடங்கிய உயர் நிலை குழுவை, குஜராத் மாநில அரசு அமைத்துள்ளது. இதை பின்பற்றி தமிழகத்திலும், உயர் நிலை குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்களை, உள்ளூர் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்த, உள்ளூர் அளவில் வல்லுனர்கள் குறித்த தகவல் தொகுப்பு அவசியம். இத்தகைய தொகுப்பில் இருந்து, தேவையான வல்லுனர்களை அரசு துறைகள் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், ''
வெளிமாநில, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்ளூர் நிலைமை தெரியாது என கூறுவது தவறான கருத்து, முக்கிய திட்டங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும், அந்நிறுவனங்கள் தேசிய அல்லது சர்வதேச நிறுவனங்களாக இருக்கலாம்.
இந்திய வல்லுனர்களின் திறன் குறிப்பாக அரசு தொழில்நுட்ப துறை அதிகாரிகளைப் பயன்படுத்துவதில் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. சாலை, பாலங்கள்,
நெடுஞ்சாலைகள், பாதாள சாக்கடை நிலத்தடி வடிகால் பணிகளில் தற்போதைய அரசுத் துறை பொறியாளர்களின் நிலையே அவர்களின் திறமைக்கு சான்று
இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

