மாநாடு என்ற பெயரில் வீணாக்கப்படுகிறதா பி.டி.ஏ., நிதி: கல்வியாளர்கள் எதிர்ப்பு
மாநாடு என்ற பெயரில் வீணாக்கப்படுகிறதா பி.டி.ஏ., நிதி: கல்வியாளர்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 01, 2024 05:27 AM

தமிழக கல்வித்துறையில் பள்ளி மாணவர்களிடம் வசூலிக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) கட்டணம் மூலம் 'அரசு திட்டங்களை பெற்றோருக்கு சொல்கிறோம் என்ற பெயரில் அரசியல் நிகழ்ச்சி போல்' மண்டல மாநாடு நடத்துவது நியாயமா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற பெயரில் மண்டலம் வாரியாக 7 மாநாடுகளை நடத்த மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் முடிவு செய்து மதுரையில் ஜன.,29 ல், முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் பெற்றோர்களை ஒரே இடத்திற்கு அழைத்து மாணவர்களுக்கு ஆளும் கட்சியின் செயல்படுத்தும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் மதுரையில் நடந்துமுடிந்துள்ள பிரமாண்ட மாநாட்டிற்கான செலவு எங்கிருந்து வருகிறது எனவும் கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்கள் செலுத்தும் கட்டணம்
கல்வித்துறையில் மாநில, மாவட்ட அளவில் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் (பி.டி.ஏ.,க்கள்) செயல்படுகின்றன. அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் ஆண்டிற்கு 1 முதல் 5 ம் வகுப்பு வரை மாணவரிடம் தலா ரூ. 25, ஆறு முதல் பிளஸ் 2 மாணவர்களிடம் தலா ரூ.50 என பள்ளிகளில் பி.டி.ஏ., கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் வசூலிக்கப்படும் இக்கட்டணத்தில் மொத்த தொகையில் 5 சதவீதம் மாவட்ட பி.டி.ஏ.,வுக்கும், மாநில பி.டி.ஏ.,வுக்கு இணைப்பு கட்டணமாக துவக்க பள்ளிகள் சார்பில் தலா ரூ.600 உயர்நிலையில் தலா ரூ.800, மேல்நிலையில் தலா ரூ.1200 அளிக்கப்படுகிறது.
இவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.கோடிக் கணக்கில் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு பி.டி.ஏ.,அமைப்புகளிடம் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்து அரசியல் கட்சிகள் போல் மண்டல பி.டி.ஏ., மாநாட்டை கல்வித்துறை நடத்த ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
மாநில பி.டி.ஏ., தலைவராக கல்வி அமைச்சர் உள்ளார். இந்த அமைப்புக்கு முதல் முறையாக துணைத் தலைவர், நியமன உறுப்பினர் என அரசியல்சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்சிக்கு 'விசுவாசம்' காட்டும் வகையில் பி.டி.ஏ., நிதியை பயன்படுத்தி அரசியல் கட்சி போல் பிரமாண்ட மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளனர். மதுரையில் நடந்த முதல் மாநாட்டிற்கு ரூ.பல லட்சம் செலவாகியுள்ளது.
மாநிலத்தில் ஏராளமான துவக்க பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. நிரந்தர ஆசிரியர் நியமிக்கும் வரை தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் இந்த நிதியில் இருந்து தான் பள்ளிகள் சம்பளம் வழங்க வேண்டும்.
கிராம அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை. புதிதாக துவங்கப்பட்ட டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு உரிய கட்டடம், உபகரணங்கள், வாகன வசதி இல்லை.
எனவே பி.டி.ஏ., நிதியை மாநாட்டிற்காக வீணடிப்பதை விட பள்ளி, மாணவர்கள் மேம்பாட்டிற்காக பயன்படுத்த கல்வித்துறை முன்வர வேண்டும் என்றனர்.
- நமது நிருபர் -