பா.ஜ., அரசில் பதவி கேட்குது பா.ம.க., ராஜ்யசபா 'சீட்' எதிர்பார்க்குது தே.மு.தி.க.,
பா.ஜ., அரசில் பதவி கேட்குது பா.ம.க., ராஜ்யசபா 'சீட்' எதிர்பார்க்குது தே.மு.தி.க.,
ADDED : ஜன 31, 2024 12:00 AM

தேர்தலுக்குப் பின், பா.ஜ., ஆட்சி அமைத்தால், பா.ம.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளித்தால் தான் கூட்டணி என, பா.ம.க., நிபந்தனை விதிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க., வலுவான கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., நாம் தமிழர் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சி பலன் அளிக்காததால், பா.ம.க., --------------------- தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க, அ.தி.மு.க., தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
பா.ம.க., - தே.மு.தி.க.,வுடன் பா.ஜ.,வும் பேசி வருகிறது. இதனால், எந்த கூட்டணியிலும் இல்லாத சிறிய கட்சிகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சமீபத்தில் பா.ம.க., நிர்வாகிகள் சிலர், பா.ஜ., சங் பரிவார் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசியுள்ளனர். அப்போது பா.ம.க., தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை:
கடந்த 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றது முதல், பா.ஜ.,வுடன் இணக்கமாகவே இருந்து வருகிறோம். 2014, 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனாலும், ஒரு எம்.பி., மட்டுமே உள்ள கட்சி எனக் கூறி, மத்திய அரசில் எந்த பதவியும் அளிக்காமல் விட்டு விட்டனர். ராஜ்யசபா உறுப்பினராக, பார்லிமென்டில் பா.ஜ., அரசுக்கு ஆதரவாக, எப்போதும் அன்புமணி குரல் கொடுக்கிறார்.
ஆனால், பார்லிமென்ட் நிலைக் குழு தலைவர், மத்திய அரசு வாரியத் தலைவர் என எந்த பதவியும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், வரும் தேர்தலுக்குப் பின் பா.ஜ., ஆட்சி அமைத்தால், பா.ம.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும். இதற்கான உறுதியை பிரதமர் மோடி அல்லது அமித் ஷா அளித்தால் மட்டுமே கூட்டணி அமைக்க முடியும். இவ்வாறு பா.ம.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது.அதற்கு பா.ஜ., நிர்வாகிகள், 'தேர்தலுக்குப் பின் அமையும் ஆட்சியில், பா.ம.க.,வுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்படும். பா.ம.க.,வின் கோரிக்கைகள், பா.ஜ., மேலிடத்தின் கவனத்திற்கு உரிய வகையில் கொண்டுச் செல்லப்படும்' என உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
பிரேமலதா நிபந்தனை
ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கினால், பா.ஜ., கூட்டணியில் சேர, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது.தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., ஆர்வம் காட்டி வருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, சேலம் புறநகர் மாவட்டச் செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் தனித்தனியாக பேச்சு நடத்தி வருகின்றனர். பிரேமலதா பிடி கொடுக்காமல் உள்ளார். அடுத்த மாதம், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு
தெரிவிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.அதே நேரம், தே.மு.தி.க., நிர்வாகிகளில் பலர், பா.ஜ., அணியில் சேரவே விரும்புகின்றனர். 'விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டதுடன், பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் மறந்துவிட்டு, அ.தி.மு.க., பக்கம் போகக் கூடாது' என, அவர்கள் கொடி
உயர்த்துகின்றனர்.அதையடுத்து, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு பிப்., 27ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், ஏதாவது ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, தே.மு.தி.க.,வுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை ஏற்றால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், பா.ஜ.,வுக்கு பிரேமலதா தகவல் கூறியுள்ளதாக தெரிகிறது.
பிரேமலதாவின் இந்த கோரிக்கையை எதிர்பார்க்காத பா.ஜ., தரப்பு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.