தி.மு.க., கூட்டணிக்குள் கடமுடா : வைகோவும் கேட்கிறார் நான்கு
தி.மு.க., கூட்டணிக்குள் கடமுடா : வைகோவும் கேட்கிறார் நான்கு
UPDATED : ஜன 31, 2024 10:47 PM
ADDED : ஜன 31, 2024 10:44 PM

தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்க, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு ஈரோடு லோக்சபா தொகுதியும், ராஜ்யசபா பதவியும் தரப்பட்டது. ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில், ம.தி.மு.க., கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். ராஜ்யசபா எம்.பி.,யாக வைகோ தேர்வு செய்யப்பட்டார்.
இம்முறை, தி.மு.க.,விடம் பேச்சு நடத்த, ம.தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ம.தி.மு.க., விரும்பும் ஆறு தொகுதிகள் பட்டியலை, இந்தக் குழு தி.மு.க., தலைமையிடம் தந்துள்ளது.இதுகுறித்து, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் டாக்டர் ரொக்கையா அறிக்கை:
கடந்த 30 ஆண்டுகளாக, ம.தி.மு.க., நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நடைபயணங்களை, தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சிகள் கூட இதுவரை செய்தது இல்லை. ஆனால், திட்டமிட்டு அச்சு ஊடகங்கள், 'டிவி' ஊடகங்கள் பெரிதாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.
ம.தி.மு.க.,விற்கு ஒரு தொகுதி தான் என, தொடர்ந்து ஊடகங்கள் சொல்வது திட்டமிட்ட செயல். 2004 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,விற்கு நான்கு தொகுதிகள் தரப்பட்டது என்பது நினைவில் இருக்கட்டும். முதன்மை செயலர் துரையின் நேரடி அரசியலுக்கு பின், கட்சி சந்தித்த தேர்தல்களில் பெரும்பாலும் வெற்றி தான். நம்பிக்கையுடன் செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கடந்த லோக்சபா தேர்தலில் நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அவற்றுடன் சேர்த்து, கூடுதலாக ஒரு தொகுதி கேட்டு, அக்கட்சி பட்டியல் அளித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன் அளித்த பேட்டி:தி.மு.க.,விடம் கடந்த முறையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கேட்போம். அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என, தொண்டர்கள் விரும்புகின்றனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட, 40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -