ADDED : ஜன 30, 2024 07:47 AM

சென்னை : தி.மு.க., கூட்டணியில், காங்கிரசை தொடர்ந்து, ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் குறித்த முதல்கட்ட பேச்சு, பிப்., 4ல் நடத்தப்படவுள்ளது.
இது குறித்து, ம.தி.மு.க.,வினர் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில், கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு, கட்சி சார்பில் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், இம்முறை திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். முதன்மை செயலர் துரை வைகோ, அங்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். திருச்சியை பொறுத்தவரை, எந்த மதம், எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வெற்றி பெறலாம். ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை, எல்.கணேசன், காதர் மொகிதீன், திருநாவுக்கரசர் என, அந்த தொகுதியை சாராத பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, பொதுத் தொகுதியான திருச்சியில், தலித் இனத்தைச் சேர்ந்த எழில்மலை, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றார். அதனால், திருச்சி லோக்சபா தொகுதி மக்கள், ஜாதி அடிப்படையில் ஓட்டளிப்பதில்லை என்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது. அதனால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும், ம.தி.மு.க., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் துரை வைகோ, தனக்கு அந்த தொகுதி மிகவும் சாதகமாக இருக்கும் என நம்புகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.