உங்களில் ஒருவன்: எதிரணியில் வியாபித்துள்ள குடும்ப அரசியலை வேரறுப்போம்!
உங்களில் ஒருவன்: எதிரணியில் வியாபித்துள்ள குடும்ப அரசியலை வேரறுப்போம்!
UPDATED : ஜன 31, 2024 06:21 AM
ADDED : ஜன 31, 2024 03:32 AM

சங்க கால பழமை மாறாமல், சங்கடங்கள் தீராமல், சங்கராபுரம் தொகுதி வளர்ச்சிக்காக மக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருந்த போது, என் மண்; என் மக்கள் பாதயாத்திரை அங்கே பயணித்தது. முனிவர்களும், ரிஷிகளும் தவம் புரிந்த புண்ணிய பூமி ரிஷிவந்தியம் தொகுதியிலும், கள்ளம் கபடமில்லாத மக்கள் நிறைந்திருக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் ஒரு சேர யாத்திரை தொடர்ந்தது.
மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், உரத்தட்டுப்பாடு என்ற நிலைமை இன்று இல்லை. இந்தியாவில் உர உற்பத்தி, 2014- - 15ல், 385 லட்சம் டன்னாக இருந்தது; 2022- - 23ல் 485 லட்சம் டன்னாக, ஒன்பது ஆண்டுகளில் 100 லட்சம் டன் உர உற்பத்தி உயர்ந்துள்ளது. நம் தேவைக்கு வெளிநாடுகளை எதிர்நோக்கும் நிலைமை குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், மானிய விலையில் யூரியா உரம் கிடைக்க, மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் செலவிட்ட தொகை 4.24 லட்சம் கோடி ரூபாய்.
நிறைவேறா வாக்குறுதி
தமிழகத்தில் மானிய விலையில் உரம் வாங்கி பயன்பெற்ற விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை, 27.35 லட்சம். வெளிச்சந்தை மதிப்பு மூட்டைக்கு 3,000 ரூபாயாக இருக்கும், 45 கிலோ மூட்டை யூரியாவை, நம் விவசாயிகளுக்கு வெறும் 242 ரூபாய்க்கு மத்திய அரசு வழங்குகிறது.
மத்தியில் லஞ்ச ஊழல் இல்லாத அரசு அமைந்திருப்பதால், அனைத்து நிதியும் பொது மக்கள் நலத் திட்டங்களுக்கே செலவிடப்படுகிறது.
l ரிஷிவந்தியத்தில் தொழில்சார் பட்டய படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் இல்லை
l விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளும் இல்லை
இத்தனை ஆண்டுகளாக எப்படி முன்னேற்றமில்லாமல் இருந்ததோ, அப்படியே தான் ஆண்ட, ஆளும் கட்சிகள் ரிஷிவந்தியம் தொகுதியை வைத்திருக்கின்றன.
ரிஷிவந்தியத்தை தாலுகாவாக உயர்த்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு, அதை நிறைவேற்றாமல், தொகுதி ஒரு பக்கம், தாலுகா ஒருபக்கம் என்று மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தியும், எந்த நடவடிக்கையும் இல்லை.
சங்கராபுரம்
கடந்த ஆண்டு தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்று, 22 உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னும், கல்வராயன் மலை பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் காணொலி வெளியான பின்னரே, காவல் துறைக்கு இந்தச் செய்தி தெரிய வருகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு செயல்பாடு எத்தனை துாரம் செயலிழந்துள்ளது என்பதற்கு, இது எடுத்துக்காட்டு.
உயர்தர கல்வி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில், ஏகலைவா மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு மத்திய அரசு, 8.67 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இங்கு வழங்கப்படும் உயர் தரமான கல்வியால், ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., போன்ற கடினமான நுழைவு தேர்வுகளில் கூட, தமிழகத்தில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி மாணவர்கள், 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகள், வருமானத்துக்காக, இதுபோன்ற ஏழை எளிய மாணவர்களுக்கான நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் வர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.
எடுபடாத முயற்சி
பிரதமர் வழங்கிய, 11 மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கிருந்தும் நிறைய ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக உருவாகின்றனர்.
இதைத் தடுக்கும் நோக்கத்தோடு தான், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் வைத்து நடத்தும் தி.மு.க.,வினர், 'நீட்' தேர்வை விலக்குவோம் என்று சொல்லி, அரசியல் செய்கின்றனர். அதெல்லாம் ஒரு நாளும் எடுபடப் போவதில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 50,030 பேருக்கு பிரதமரின் திட்டம் மூலமாக வீடு, 1,51,824 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,74,938 வீடுகளில் இலவச கழிப்பறைகள் என, லட்சக்கணக்கான மக்கள், மத்திய அரசின் நிதியால் பயன் பெற்றுள்ளனர்.
நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தல், நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது; இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கானது.
எனவே, மீண்டும் பிரதமராக மோடியை கொண்டு வருவதற்கு, பா.ஜ.,வை முழுமனதோடு ஆதரிப்போம். இந்தியாவை காப்போம்.
தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுதும் எதிர் அணியில் வியாபித்துக் கிடக்கும் குடும்ப அரசியலை வேரறுப்போம்.
பயணம் தொடரும்...