ராமநாதபுரம் தொகுதி: முஸ்லிம் லீக் விருப்பம்; தி.மு.க., எதிர்ப்பு
ராமநாதபுரம் தொகுதி: முஸ்லிம் லீக் விருப்பம்; தி.மு.க., எதிர்ப்பு
ADDED : பிப் 01, 2024 04:59 AM

சென்னை: 'ராமநாதபுரம் தொகுதியை முஸ்லிம் லீக்கிற்கு கொடுக்கக்கூடாது' என, தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம், தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
கடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது. அதே தொகுதியுடன் கூடுதலாக ஒன்று கேட்போம் என, முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் நடந்த, தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் ஒரே குரலாக, முஸ்லிம் லீக் கட்சிக்கு இந்த முறை இந்த தொகுதியை ஒதுக்கக்கூடாது என்று முறையிட்டனர். தி.மு.க.,வே போட்டியிட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.
'யாருக்கு தொகுதி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அனைவரும் ஒற்றுமையோடு பணியாற்றுங்கள்' என, ஒருங்கிணைப்பு குழுவினர் கூறினர்.
இதற்கிடையில், 'இம்முறை தி.மு.க., மாணவரணி நிர்வாகி ராஜிவ்காந்தியை, ராமநாதபுரத்தில் நிறுத்தலாம்' என, அமைச்சர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் லீக் கட்சி தலைமை நிலைய செயலர் நிஜாம் முகைதீன் கூறுகையில், ''கடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில், நவாஸ் கனி வெற்றி பெற்றார்.
மீண்டும் அதே தொகுதியை, நாங்கள் கேட்கிறோம். கூடுதலாக ஒரு தொகுதி தந்தால் மகிழ்ச்சி அடைவோம். தரவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டோம்,'' என்றார்.