வருகைப்பதிவு குறைவு, பேராசிரியர்கள் பற்றாக்குறை; 35 அரசு மருத்துவ கல்லுாரிகள் அங்கீகாரம் ரத்தாகுமா?
வருகைப்பதிவு குறைவு, பேராசிரியர்கள் பற்றாக்குறை; 35 அரசு மருத்துவ கல்லுாரிகள் அங்கீகாரம் ரத்தாகுமா?
UPDATED : மே 14, 2025 12:57 AM
ADDED : மே 14, 2025 12:34 AM

சென்னை: பேராசிரியர்கள் வருகைப்பதிவு குறைவு, காலிப் பணியிடங்கள் நீடிப்பு உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, 35 மருத்துவ கல்லுாரிகளுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
நாட்டில், 700க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை, தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., மேற்கொண்டு வருகிறது.
75 சதவீதம்
கல்லுாரிகளில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல, மருத்துவ கல்லுாரிகள் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய, ஆதாருடன் கூடிய, 'பயோமெட்ரிக்' முறை உள்ளது.
அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லுாரி அலுவலர்களின் வருகைப்பதிவு, 75 சதவீதம் இருப்பது அவசியம். இல்லாத பட்சத்தில், அங்கீகாரம் புதுப்பித்தல், இடங்களை அதிகரித்தல் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
இந்நிலையில், 2025 - 26ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலுக்கான ஆய்வை, தேசிய மருத்துவ ஆணைய குழு மேற்கொண்டது. அதில், சென்னை மருத்துவ கல்லுாரியை தவிர்த்து, 35 மருத்துவ கல்லுாரிகளிலும் குறைந்த வருகைப்பதிவு, பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையடுத்து, சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார், செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி, வேலுார், தேனி, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர்.
சிவகங்கை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, அரியலுார், திண்டுக்கல், கோவை, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள் உள்ளிட்ட 35 அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
இதில், 26 மருத்துவ கல்லுாரிகள் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள, ஒன்பது கல்லுாரிகளுக்கு, வரும் 16ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்குள் உரிய விளக்கம் அளித்து, குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை எனில், மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளது.
உரிய விளக்கம்
அனைத்து மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படாவிட்டாலும், ஒருசில கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்தாகலாம் என்று, கூறப்படுகிறது. அவ்வாறு ரத்தானால், அங்கு புதிதாக மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது: இது, வழக்கமான நோட்டீஸ் தான். பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வருகைப்பதிவு குறையவில்லை. மாறாக பணியிட மாற்றம், தொடர் விடுப்பு போன்றவை காரணமாக, சில இடங்களில் போதிய வருகைப்பதிவு இல்லை. அது சரி செய்யப்பட்டு, ஆணையத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில், ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இதனால், மாணவர் சேர்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.