குறைந்த மின்னழுத்தம்: துாங்க முடியாமல் தமிழகமே அவதி
குறைந்த மின்னழுத்தம்: துாங்க முடியாமல் தமிழகமே அவதி
ADDED : மே 16, 2025 12:36 AM

சென்னை : சென்னை உட்பட பல்வேறு இடங்களில், 'லோ வோல்டேஜ்' எனப்படும், குறைந்த மின்னழுத்த பிரச்னையால், 'ஏசி' சாதனம், மோட்டார் பம்ப் போன்ற வற்றை இயக்க முடியாமல், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைக்கிறது. எனினும், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களில் ஏற்படும் பழுதால், பல இடங்களில் மின் தடை தொடர்கிறது.
ஒரு டிரான்ஸ்பார்மரின் திறனுக்கு ஏற்ப, எத்தனை மின் இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய வேண்டுமோ, அந்த அளவுக்கு தான் வினியோகம் செய்ய வேண்டும். அதை விட அதிகமான இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்யும் போது, 'லோ வோல்டேஜ்' எனப்படும், குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. தமிழகம் முழுதும் இந்தப் பிரச்னை உள்ளது.
இதுதொடர்பாக, மின்னகம் சேவை மையத்திற்கு அதிக புகார்கள் வருகின்றன. அதேபோல, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், மின் தடை பிரச்னையும் உள்ளது. இரவு நேர மின் தடை செய்யப்படுவதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
தினமும் இரவு 9:00 மணிக்கு மேல், குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. இதனால், மின் விளக்குகள், மின் விசிறிகள் சரியாக இயங்குவதில்லை. 'ஏசி, மோட்டார் பம்ப்' போன்றவற்றை இயக்கவே முடிவதில்லை. அதிகாலை தான் மின்சாரம் சீராக வருகிறது.
இதனால், இரவில் துாங்க முடிவதில்லை. அதேபோல் பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்னழுத்த பிரச்னை ஏற்படும் இடங்களை கண்டறிந்து, கூடுதலாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு வருகிறது. 'திடீரென பெய்யும் மழையால், மின் சாதனங்களில் பழுது ஏற்படுகிறது. இதனால், இந்தப் பிரச்னை ஏற்படுகிறது; அவற்றை விரைந்து சரிசெய்ய, பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என்றார்.