மத்திய பிரதேசம்: அபிஷேக் பச்சனை களமிறக்க சமாஜ்வாதி கட்சி திட்டம்?
மத்திய பிரதேசம்: அபிஷேக் பச்சனை களமிறக்க சமாஜ்வாதி கட்சி திட்டம்?
UPDATED : மார் 22, 2024 04:18 AM
ADDED : மார் 22, 2024 01:18 AM

தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் எம்.பி.,க்களின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தும் வகையில், சமாஜ்வாதி சார்பில் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை களமிறக்க, 'இண்டியா' கூட்டணி திட்டமிட்டுஉள்ளதாக தெரிகிறது.
காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுபோல், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தடமே தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது மத்திய பிரதேச மக்களுக்கு எப்படி தெரியும் என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள கட்சிக்கே, இந்த மாநில மக்கள் பெரும் ஆதரவை அளித்து வந்துள்ளது, கடந்த தேர்தல்களில் நிரூபணமாகிஉள்ளது.
கடந்த, 2014 தேர்தலில், பா.ஜ., 27ல் வென்றது. கமல்நாத்தின் சிந்த்வாரா, ஜோதிராதித்ய சிந்தியாவின் குனா தொகுதிகள் மட்டும் தப்பின.
கடந்த, 2019 தேர்தலில் குனா தொகுதியையும் பா.ஜ., கைப்பற்றியது. தற்போது நடக்க உள்ள தேர்தலில், சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு எம்.பி.,யை பெறுவதற்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதிக்கு கஜுராகோ தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜபல்பூரில் ஓரளவுக்கு சமாஜ்வாதிக்கு ஆதரவு உள்ளது. ஆனால், கஜுராகோ தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கள் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யான ஜெயா பச்சன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை, சமாஜ்வாதி களமிறக்கலாம் என, பரவலாக பேசப்படுகிறது.
இந்த தொகுதியை, பா.ஜ.,வின் உமா பாரதி, தற்போதைய மாநிலத் தலைவர் வி.டி.சர்மா, கடந்த, 20 ஆண்டுகளாக தங்கள் வசம் வைத்திருந்தனர். நட்சத்திரத்தை களமிறக்கினால் பலன் கிடைக்கும் என்று சமாஜ்வாதி நம்புகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

