மதுரை முருக பக்தர்கள் மாநாடு; முழு பலத்தை காட்ட களமிறங்கிய பா.ஜ., சங் பரிவார் அமைப்புகள்
மதுரை முருக பக்தர்கள் மாநாடு; முழு பலத்தை காட்ட களமிறங்கிய பா.ஜ., சங் பரிவார் அமைப்புகள்
UPDATED : ஜூன் 03, 2025 01:12 PM
ADDED : ஜூன் 03, 2025 03:25 AM

சென்னை: மதுரையில் வரும் 22ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் முழு பலத்தைக் காட்ட, பா.ஜ.,வும், சங் பரிவார் அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில், ஆடு, கோழி பலியிட, சில அமைப்புகள் முயன்றதைத் தொடர்ந்து, அங்கு பிரச்னை ஏற்பட்டது.
5 லட்சம் பேர்
அதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி நடப்பதாக, ஹிந்து அமைப்புகள் சார்பில், கடந்த பிப்ரவரி 4ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் வெற்றியைத் தொடர்ந்து, ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக, கடந்த மார்ச் மாதமே ஹிந்து முன்னணி அறிவித்தது. துவக்கத்தில் இந்த மாநாட்டு பணிகளில், ஹிந்து முன்னணி மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், இப்போது பா.ஜ., - விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், குறைந்தது ஐந்து லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்ற இலக்குடன், பா.ஜ.,வும், சங் பரிவார் அமைப்புகளும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன.
கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், பா.ஜ., சங் பரிவார் அமைப்பு நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருவேளை சாப்பிடாமல் விரதம் இருந்து, மாநாட்டு வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
அழைப்பு
இது தொடர்பாக, ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறியதாவது:
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, தமிழக வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். அரசியல் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இல்லாமல், முருக பக்தர்களின் ஒன்றுகூடலாகவே மாநாடு இருக்கும்.
அதனால்தான், தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்து வருகிறோம். சாத்துார் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர். மாநாட்டு அழைப்பிதழ் கொடுப்பதற்காக, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர், மாநாட்டில் பங்கேற்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.