ADDED : நவ 23, 2025 02:48 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்., உடன் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளன.
மஹாராஷ்டிராவின் 246 முனிசிபல்கள் மற்றும் 42 பஞ்சாயத்து தேர்தல்கள் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. 'இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாமல், தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்., ஒரு பக்கம், உத்தவ் தாக்கரே இன்னொரு பக்கம் என போட்டியிடுவதால், பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்' என சொல்லப்படுகிறது.
காங்கிரசோ, 'உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடியாது' என, கறாராக சொல்லிவிட்டது; 'எங்களுக்கு உதவுங்கள்' என, சரத் பவாரிடம் கை ஏந்தி நிற்கிறது. ஆனால், இதுவரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லையாம்.
உத்தவ் தாக்கரேவும், அதே தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ் தாக்கரேவின் கட்சியான நவ்நிர்மான் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்கின்றனர். அப்படியானால் மாராத்தி சமூகத்தினர் இவர்களுக்கு ஓட்டளிப்பர்; இதனால், ஓட்டு சிதறல் ஏற்படும். ஆனால், இதுகுறித்து எதிர்க்கட்சி கூட்டணி கவலைப்படவில்லை.
அதே சமயம், பா.ஜ., கூட்டணியிலும் சில குழப்பங்கள். ஏக்நாத் ஷிண்டே கட்சியினர், பா.ஜ.,விற்கு எதிராக சில வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். சில இடங்களில் பா.ஜ.,வினரே சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில், 'எதிர்க்கட்சி கூட்டணி ஒற்றுமையாக போட்டியிட்டால், பா.ஜ.,வை வெல்ல முடியும்; ஆனால் ஒற்றுமை இல்லையே... என்ன செய்வது?' என, பா.ஜ.,விற்கு எதிரானவர்கள் வருத்தப்படுகின்றனர்.

