உபரி நீரால் மூழ்கும் மணலி கிராமங்கள்; கால்வாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
உபரி நீரால் மூழ்கும் மணலி கிராமங்கள்; கால்வாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
UPDATED : டிச 26, 2024 04:16 AM
ADDED : டிச 25, 2024 11:47 PM

மணலி, புழல் ஏரி நிரம்பும் பட்சத்தில் புழல், காவாங்கரை, வடகரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல், எஸ்.ஆர்.எப்., - வைக்காடு சந்திப்பு, பர்மா நகர் உயர்மட்ட பாலம், சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக சென்று, கொசஸ்தலை உபரி நீருடன் இணைந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
பூண்டி ஏரியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர், பல கிராமங்களை கடந்து, சென்னை மாநகராட்சியின், வெள்ளிவாயல், நாப்பாளையம், மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம் அருகே, புழல் உபரி நீருடன் இணைந்து, எண்ணுார் முகத்துவாரத்தில், கடலில் கலக்கிறது.
இந்நிலையில், 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மணலி புதுநகர், இடையஞ்சாவடியில், கொசஸ்தலை ஆற்று கரைகள், 15 கோடி ரூபாய் செலவில் பலப்படுத்தப்பட்டன. இதனால், சமீபத்திய மழைக்கு அங்கு பாதிப்பில்லை.
ஆனால், கொசஸ்தலை ஆற்றின், ஆர்.எல். நகர் - சடையங்குப்பம் வரை, 1.8 கி.மீ., துாரம் கரைகள் துார்ந்து காணப்படுகிறது.
புழல் ஏரியில் இருந்து, ஆமுல்லைவாயல் உயர்மட்ட பாலம் வரை, 13.5 கி.மீ., துாரம் உபரி கால்வாய் உள்ளது. இதில், 8.5 கி.மீ., துாரம் வரை இருபக்கமும் கரைகள் உள்ளன.
எஸ்.ஆர்.எப்., - வைக்காடு சந்திப்பில் இருந்து, சடையங்குப்பம் வரையிலான, 5 கி.மீ., துாரத்திற்கு கரைகள் கிடையாது.
இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் பெஞ்சல் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு, நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி, பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு, 16,500 கன அடி உபரி நீரும் திறக்கப்பட்டது. இரு ஏரிகளின் உபரி நீரும், சடையங்குப்பம் அருகே சங்கமித்து, கடலில் கலக்க வேண்டும்.
இந்நிலையில், உபரி நீர் திறக்கப்பட்ட இரண்டாவது நாளில், கடலின் வாட்டம் காரணமாக எதிர்த்து வீசிய அலைகளால், உபரி நீர் கடலில் கலப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, உபரி நீர் தேங்கி, கரை இல்லாத சடையங்குப்பம், இருளர் காலனி, பர்மா நகர் போன்ற பகுதிகளின், இணைப்பு தார் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கு தீர்வாக, புழல் உபரி கால்வாயில், ஆமுல்லைவாயல் உயர்மட்டம் துவங்கி, சடையங்குப்பம் வரை, 5 கி.மீ., துாரம், கொசஸ்தலை ஆற்றில், மணலிபுதுநகர் - ஆர்.எல். நகர் துவங்கி சடையங்குப்பம் வரை, 1.8. கி.மீ., துாரமும் பலமான கரைகள் அமைக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
புழல் - பூண்டி உபரி கால்வாய்களின் பக்கவாட்டில், சடையங்குப்பம் - பர்மா நகரை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் கரை அமைக்கப்பட்டால், ஊருக்குள் தேங்கும் மழைநீரும், சடையங்குப்பம் ஏரி உபரி நீரும் வெளியேற வழியில்லாமல் போய்விடும் என, கூறப்படுகிறது.
பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மதகுகளுடன் கூடிய வடிகால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. பகிங்ஹாமில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில், மதகுகள் அடைக்கப்பட்டு, ராட்சத மின் மோட்டார் உதவியுடன் மழைநீர் கால்வாய்க்கு கடத்தப்படும்.
இந்த அமைப்பு, மணலி புதுநகர் - கொசஸ்தலை ஆற்று கரையோரமும் உள்ளது. அதே போல், வடிகால், மதகு மற்றும் மின்மோட்டார் வசதி ஏற்படுத்தினால், பிரச்னை இருக்காது என, கருதப்படுகிறது.