தி.மு.க.,வை மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர்; விஜய் ஆதரவு காங்கிரசார் ரகசிய ஆலோசனை
தி.மு.க.,வை மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர்; விஜய் ஆதரவு காங்கிரசார் ரகசிய ஆலோசனை
UPDATED : பிப் 25, 2026 02:46 PM
ADDED : பிப் 25, 2026 05:13 AM

காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், தி.மு.க.,வை மீண்டும் சீண்டியுள்ள நிலையில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், சென்னையில் நேற்று நட்சத்திர ஹோட்டலில் ரகசிய ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
மாணிக்கம் தாகூர் நேற்று தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி, மூன்றாவது இடம் பிடித்து, 18 முதல் 20 சதவீதம் வரை ஓட்டுகள் பெறும். பொறுமை இழப்பது, போரில் தோற்றதற்கு சமம்' என பதிவு வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவு, தி.மு.க.,வை மீண்டும் சீண்டும் வகையில் அமைந்துள்ளது. 'இந்த தேர்தலில், தி.மு.க., - தே.ஜ., கூட்டணிக்கு இடையே தான் நேரடி போட்டி' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில், 'த.வெ.க.,விற்கும் தி.மு.க.,விற்கும் இடையே தான் போட்டி' என நடிகர் விஜய் கூறுகிறார்.
விஜய் கருத்தை ஆமோதிக்கும் வகையில், பா.ஜ., கூட்டணி மூன்றாவது இடம் பிடிக்கும் என மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது, கூட்டணிக்குள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் நேற்று ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.
இது குறித்து, அந்த நிர்வாகிகள் கூறியதாவது: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தும்போது, 'ஆட்சியில் பங்கு வேண்டும்; உள்ளாட்சி தேர்தலில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்; ராஜ்யசபா சீட் தரப்பட வேண்டும்' என்ற கோரிக்கைகளையும், தி.மு.க.,விடம் காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும் என தீர்மானித்துள்ளோம். அதை வலியுறுத்தி, டில்லி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
சென்னை தி.நகரில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் ஒருவரின் வீட்டில், 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சித் தலைமைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

